
JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய FIITJEE (Forum for Indian Institute of Technology Joint Entrance Examination) என்ற நிறுவனம் பல கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது.
வட மாநிலங்களில் உள்ள இந்நிறுவனத்தின் பல கிளைகள் கடந்த ஜனவரி மாதம் திடீரென மூடப்பட்டது. இதனால் பயிற்சிக்கு லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தியிருந்த பெற்றோரும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில், தரமான கல்வி வழங்குவதாக உறுதியளித்து தங்களின் பணம் ஏமாற்றப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், முறையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி நடத்தாதது உள்ளிட்ட குற்றச்சாட்டையும் பெற்றோர் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அந்நிறுவனத்தின் இயக்குநர் டி.கே.கோயல் மற்றும் பிற உயர் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் பல கோடி ரூபாயை கட்டணமாக மொத்தமாகவும் மாதத் தவணை முறையிலும் இந்நிறுவனம் வசூலித்திருப்பது தெரியவந்தது.
இப்பயிற்சியகம் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போதே நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் மாணவர்களிடம் 4 ஆண்டுகளுக்கான கட்டணம் வசூலித்துள்ளது.
அந்த வகையில், 2025-26 கல்வியாண்டில் 9,823 மாணவர்களிடம் இருந்து ரூ.181.89 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026-27-க்கு ரூ.47.48 கோடி; 2027-28-க்கு ரூ.17.07கோடி; 2028-29-க்கு ரூ.3.76 கோடி என ரூ.250.2 கோடியை கட்டணமாக வசூலித்து இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள FIITJEE பயிற்சியகங்களும் மூடப்பட்டதால், பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சில தினங்களுக்கு முன்னர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து FIITJEE நிறுவனத்தின் சென்னை பொறுப்பாளர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குநர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தது. இதில், பல்வேறு ஆவணங்களுடன் சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.