இந்திய தேசியக் கொடியில் காவி-வெள்ளை-பச்சை நிறங்களும், நடுவே நீல நிறத்தில் அசோக சக்கரமும் பொறிக்கப்பட்டிருப்பதற்கானக் காரணத்தை பள்ளிக்கூடத்திலிருந்தே பலரும் அறிந்திருப்பார்கள். கட்சிக் கொடிகளும் அதன் நோக்கத்தை வலியுறுத்தக் கூடிய வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன.
திராவிடர் கழகக் கொடியில் கருப்பு நிறத்தின் நடுவே சிவப்பு வட்டம் இருக்கும். சாதி-மதம்-மூடநம்பிக்கை என்ற இருள் சூழ்ந்த சமுதாயத்தில் புரட்சிகரமான வெளிச்சம் பரவவேண்டும் என்ற அடிப்படையில் கருப்புக்கு நடுவே அந்த சிவப்பு வட்டம் வடிவமைக்கப்பட்டது.
தி.மு.க.வின் கொடியில் கருப்பு நிறம் மேலேயும், அதற்கு இணையாக சிவப்பு நிறம் கீழேயும் இருக்கும். அரசியல்-சமூகம்-பொருளாதாரம் மூன்றிலும் உள்ள இருட்டு நிலையை அகற்றக்கூடிய வகையில், கீழ்வானத்திலிருந்து உதிக்கும் சூரியன் வெளிச்சம் போல சிவப்பு நிறம் உயரும்போது, இருள் விலகி, முழுமையான ஒளி பரவும் என்று அண்ணா அதற்கு விளக்கம் கொடுத்தார்.
அ.தி.மு.க.வின் கொடி தி.மு.க. கொடிக்கு நடுவே அண்ணாவின் படத்தை அமைத்து வடிவமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் முதலில் தாமரையுடன் கூடிய ஒரு கொடியை வடிவமைத்தார்கள். எனினும், தி.மு.க கொடியையே அ.தி.மு.க தரப்பில் தொடக்கத்தில் ஏற்றினார்கள். இது இரு கட்சிகளுக்கும் மோதலை உருவாக்கிய நிலையில், கருப்பு-சிவப்பின் நடுவே அண்ணாவின் படம் வைக்கப்பட்டு, புதிய கொடி உருவானது.
ம.தி.மு.க. தொடங்கப்படுவதற்கு முன் வைகோவும் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வுக்கு உரிமை கொண்டாடினர். தேர்தல் ஆணையம் அதனை ஏற்கவில்லை. அதனால் புதுக்கொடியுடன் ம.தி.மு.க. தொடங்கப்பட்டது. மேலும் கீழும் சிவப்பு, நடுவே கருப்பு என அக்கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும் என்றும், மக்களையும் நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்றும் கமல் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க எனத் தமிழ்நாட்டில் உருவான கட்சிகளின் கொடிகளுக்கான நிறங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலே கருப்பு-கீழே சிவப்பு என்பதற்கு மாற்றாக மேலே சிவப்பு, கீழே கருப்பு நடுவே மஞ்சள், அதன் நடுவே சுடர் என தே.மு.தி.க. கொடி வடிவமைக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு என்பதால் விடுதலைப்புலிகளைப் பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு வண்ணத்தில் புலித் தலை பொறித்த கொடி வடிவமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்கான நிறமாக நீலத்தையும், அரசியல் அதிகாரப் புரட்சிக்கான நிறமான சிவப்பையும் கொண்டு நட்சத்திரத்தைப் பொறித்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
டி.ராஜேந்தர் இரண்டு கட்சிகளை நடத்தி, இரண்டு கொடிகளை உருவாக்கியவர். ஒரு கட்சி, தாயக மறுமலர்ச்சிக் கழகம். மற்றொரு கட்சி, லட்சிய தி.மு.க. பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் படத்தைக் கொடியில் பதித்து, எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைக் கொஞ்ச காலம் நடத்தினார்.
தமிழ்நாட்டில் இன்னும் பல கட்சிகளும் உண்டு. கொடிகளும் உண்டு. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சி பிரியும்போது, தாய்க் கட்சியின் கொடியின் நிறங்களைப் பயன்படுத்துவதும், அதில் சில மாற்றங்களைச் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்திருக்கும் நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, ஏற்றி வைத்து, கொடிக்கானப் பாடலையும் வெளியிட்டு, கட்சியினரை உறுதி மொழி ஏற்கச் செய்திருக்கிறார்.
சிவப்பு-மஞ்சள்-சிவப்பு என்ற நிற அமைப்பில் நடுவில் இரண்டு யானைகள் அவற்றுக்கிடையே வாகை மலர், வட்டமாக நட்சத்திரங்கள் என்ற வடிவமைப்புடன் த.வெ.க.வின் கொடி அமைந்துள்ளது. சிவப்பு என்பது தியாகம்-புரட்சி ஆகியவற்றின் நிறம். மஞ்சள் என்பது மங்கலமான சூழலைக் குறிப்பது. யானைகள் வலிமைக்குரியவையாகவும், வாகை மலர் என்பது வெற்றியின் சின்னமாகவும் பார்க்கப்படும் நிலையில், இரு வண்ணங்களிலான நட்சத்திரங்கள், யானைகள் காலைத் தூக்கியபடி பிளிர்வது உள்ளிட்டவை ஆர்வத்தைக் கிளறக்கூடியதாக உள்ளன.
கொடிக்கான விளக்கத்தை கட்சியின் மாநாட்டில் தெரிவிப்பதாகவும், மாநாட்டுத் தேதியைப் பின்னர் அறிவிப்பதாகவும் விஜய் கூறியுள்ளார். கொடியைத் தங்கள் ஊர்களில் ஏற்றிவிட்டு, அதன்பின் அதற்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம் என்று விஜய் கட்சியினரும் காத்திருக்கின்றனர்.