 
                  ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் ஃபோர்டு உயரதிகாரிகளிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க முடிவெடுத்து முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது போர்டு நிறுவனம்.
அமெரிக்காவின் மிக்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபோர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் 90களில் தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை தொடங்கியது. சென்னை மறைமலைநகரில் நடந்து வந்த கார் உற்பத்தியினை கடந்த 2021ம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டது. 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டுடன் நட்புறவுடன் செயல்பட்டு வந்த அந்த ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக சாத்தியங்கள் பற்றி அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் கலந்து பேசியிருந்தார் முதல்வர்.
தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த பயணத்தில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து உலகின் பல முன்னணி நிறுவனங்களின் உயரதிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்து 2021ம் ஆண்டுடன் உற்பத்தியை நிறுத்திவிட்ட ஃபோர்டு நிறுவன உயரதிகாரிகள் ஃபோர்டு நிறுவன ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட், துணைத்தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் டாக்டர் ஸ்ரீபாத் பட் ஆகியோரை சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி செய்ய அழைப்பு விடுத்தார் முதல்வர். ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தி இருந்தார் முதல்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம். இதற்காக, இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,250 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 
         
        