அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான Ford, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையை JSW குழுமத்திற்கு விற்பனை செய்யும் முடிவில் இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்த பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, Ford இந்தியாவில் மீண்டும் வாகன உற்பத்தியைத் தொடங்கும் என பரவலாக கூறப்பட்டு வந்ததற்கு ஏற்ப இரு முக்கிய கார்களுக்கான பெயரை இந்தியாவில் பதிவு செய்தது.
இது குறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்றாலும், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகன உற்பத்திக்கான புதிய திட்டத்தில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு சென்னை தொழிற்சாலையில் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும் Ford நிறுவனம் இந்தியாவில் மீண்டும் வாகனங்களை விற்பனை செய்வதற்கான சாத்தியம் இல்லை என சில செய்திகள் கூறுகின்றன. அப்படியானால் ஜாக்வார் லேண்ட்ரோவர் நிறுவனம் போல், இந்தியாவின் விற்பனை உரிமையை யாருக்கேனும் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் உள்ள தனது உற்பத்தி ஆலையை மூடி கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், Ford நிறுவனம் ஒரு வலுவான மறுபிரவேசத்தை செய்ய இருக்கும் செய்திகள் உறுதியாகியுள்ளது.
Ford நிறுவனத்தின் வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆன போதிலும், அதன் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா தொடர்ந்து விளங்கி வருகிறது. மேலும் Ford நிறுவனத்தின் உலகளாவிய டெக் சேவைகளில் சென்னை அலுவலகத்தின் பங்கு மிகவும் பெரியது.
இந்தசூழலில், சென்னையில் உள்ள Ford நிறுவனத்தின் Ford Business Solutions நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 12,000-க்கும் மேற்பட்ட திறன்மிக்க ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 3000 புதிய ஊழியர்களை பணியமர்த்த Ford முடிவு செய்துள்ளது.
தனது தொழில்நுட்பப் பிரிவை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Ford நிறுவனத்தின் இந்த திட்டத்தால், தொழில்நுட்பத் துறையில் சென்னை மிகப் பெரிய நன்மைகளைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.