ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டும் பூத் வாரியான ‘Form 17C’ படிவத்தை தனது இணையத்தில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவிப்பது வலுவான சந்தேகத்தை எழுப்புவதாக, மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் இரண்டுக் கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவுத் தரவுகளை பல நாட்கள் கழித்து திடீரென 6% வரை அதிகரித்து வெளியிட்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நிகழவோ அல்லது மாற்றவோ கூடும் என்கிற சந்தேகம் எழுவதாகவும், பிரஷாந்த் பூஷண் கவலை தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘பின்னணி’
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி சுமார் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, அன்றிரவு 7 மணி நிலவரப்படி சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், மறுநாள் ஏப்ரல் 20 அன்று தரவுகளை திருத்தி 5 சதவிகிதம் வரை உயர்த்தி 65.5 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தது.
அதேபோல், ஏப்ரல் 26-ம் தேதி 88 மக்களவைத் தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு 60.96 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறிய தேர்தல் ஆணையம், மறுநாள் ஏப்ரல் 27 அன்று தரவுகளை திருத்தி 66.7 சதவீதமாக அதிகரித்து வெளியிட்டது.
தொடர்ந்து பல முறை வாக்குப்பதிவு விகிதங்களை திருத்தி தேர்தல் ஆணையம் பதிவெற்றி வந்தது, பரபரப்பை ஏறபடுத்தி இருந்தது.
இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த ஆசாதாரண செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கிய நிலையில், பல நாட்கள் கழித்து ஏப்ரல் 30-ம் தேதி, முதல் இரண்டுக் கட்டத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவுத் தரவுகளை மீண்டும் திருத்தி முறையே 66.14% மற்றும் 66.71% என அறிவித்தது.
இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளின் இறுதி விவரங்களை வெளியிடுவதில் முன் எப்போதும் கண்டிராத தாமதம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் கேள்விகளை எழுப்பி கடிதங்கள் எழுதின.
வாக்குப்பதிவு விகிதங்களை மட்டும் வெளியிட்ட தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கையை ஏன் வெளியிடவில்லை? என்றும் இந்த எண்ணிக்கை தெரியாவிட்டால் வாக்குப்பதிவு சதவீதங்கள் அர்த்தமற்றவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அச்சம் தெரிவித்தார்.
தற்போது வரை 4 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்த வாக்காளர்களின் சரியான எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் உள்ளதற்கு எதிராகவும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.
தொகுதிகள் வாரியான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைகளை வெளியிடுவது தேர்தல் ஆணையத்திற்கு வழக்கமான ஒன்று எனவும் 2019 மக்களவைத் தேர்தல் உட்பட கடந்த காலங்களில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு விகிதங்களை திருத்துவது வழக்கம் என்றாலும், இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. வாக்குப்பதிவு விகிதங்கள் சுமார் 5, 6 சதவீதம் வரை திருத்துவது அசாதாரணமானது என்றும், முன்னெப்போதும் இல்லாத கால தாமதமும் கவலைகளை எழுப்புகிறது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டும் பூத் வாரியான ‘Form 17C’ படிவத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டி பல்வேறு தரப்பில் இருந்தும் தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ADR என்கிற தன்னார்வ அமைப்பு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை நேற்று(மே 17) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், ஏன் Form 17C படிவத்தை வெளியிட முடியாது? என்பது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு கால அவகாசம் வழங்கி வழக்கை மே 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
‘Form 17C’ படிவம் என்றால் என்ன?
- தேர்தல் நடத்தை விதிகள் 1961-இன் படி, வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளைக் கொண்ட இரண்டு படிவங்கள் உள்ளன – Form 17A மற்றும் 17C.
- Form 17A என்பது வாக்காளர்களின் பதிவேடு ஆகும், இதில் வாக்குச்சாவடிக்குள் வரும் ஒவ்வொரு வாக்காளரின் விவரங்களையும் வாக்குச்சாவடி அதிகாரிகள் பதிவு செய்து பதிவேட்டில் கையொப்பமிடுவார்கள்.
- Form 17C என்பது பதிவான வாக்குகளின் கணக்கு மற்றும் வாக்குப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்படும்.
- Form 17C-ல் மொத்த வாக்காளர்கள் மற்றும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பொருந்த வேண்டும்.
- Form 17C-ல் உள்ள தரவுகளே இறுதியான வாக்குப் பதிவுத் தரவுகளாக கருதப்படும்.
- வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவுகளை சரிபார்க்க வேட்பாளர்களால் Form 17C படிவம் தான் பயன்படுத்தப்படும்.
ஆகையால் தான், முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, பூத் வாரியான Form 17C தரவை பொதுவெளியில் வெளியிடக் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், Form 17C படிவங்களை பொது வெளியில் வெளியிடவோ அல்லது ஒட்டுமொத்தமாக பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதற்கு தாங்கள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டிருக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவருகிறது.
ஒரு வலுவான ஜனநாயக செயல்முறைக்கு, இந்திய தேர்தல் ஆணையம் போன்ற பொது தன்னாட்சி அமைப்புகள் அதிக அளவில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பேணுவது அவசியம். Form 17C பதிவேற்றம் செய்தும் சரியான நேரத்தில், துல்லியமான வாக்குப்பதிவு தரவுகளை வழங்குவதுமே தேர்தல் செயல்முறையின் நேர்மையை உறுதிப்படுத்த உதவும் அடிப்படை படிகள் ஆகும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பாகவே தேர்தல்களின் நேர்மை பற்றிய வலுவான சந்தேகங்களை எழுப்ப முற்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.