பிரான்ஸ் நாட்டில் நேற்று(ஜூன் 30) நடந்த முதல் சுற்று நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று மரைன்-லு-பென்னின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி (RN), அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் மையவாத கட்சியை 3-வது இடத்திற்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளது.
இரு சுற்றுகளாக நடைபெறும் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்று முடிவில் மையவாதம் மற்றும் வலதுசாரி கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தேசிய பேரணி (RN) கட்சி சுமார் 33 சதவீத வாக்குகளைப் பெற்று அந்நாட்டு அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
இனவெறி, யூத-எதிர்ப்பு, குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு, ரஷ்ய ஆதரவு கொண்ட கட்சியாக குற்றம்சாட்டப்படும் மரைன்-லு-பென் தலைமையிலான தேசிய பேரணி (RN) கட்சிக்கு முதல் சுற்று முடிவுகள் குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
முதல் சுற்றில் தேசிய பேரணி (RN) கட்சிக்கு கிடைத்துள்ள பெரும்பானமை வாக்குகளால், பிரான்ஸில் தீவிர வலதுசாரி எதிர்ப்புப் போராட்டங்களை தூண்டியுள்ளது. தலைநகர் பாரிஸில் ஆயிரக்கணக்கான வலதுசாரி எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி, ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பாரிஸ் நகரில் அணிவகுத்துச் செல்லும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அந்நாட்டு போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர இடதுசாரி அல்லது தீவிர வலதுசாரி கட்சிகள் வெற்றியடைந்தால் பிரான்ஸில் “உள்நாட்டுப் போரை தூண்டிவிடும்” என்று கடந்த மாதம் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்திருந்தார்.
கடந்த 2022 பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள மாக்ரோனின் பதவிக் காலம் 2027-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், பிரான்ஸில் தீவிர வலதுசாரி கட்சி ஆட்சிப் பெறுப்பேற்றால் கடும் சவாலை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.
இந்தாண்டு தொடக்கம் முதல் இமானுவேல் மாக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசின் விவசாய கொள்கைகளுக்கு எதிராக அந்நாட்டு விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரான்ஸில் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி பிரதிநிதிகளுக்கு தொகுதி மக்களின் பரந்த அளவிலான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் 577 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ‘இரண்டு சுற்று தேர்தல் முறை’ நடத்தப்படுகிறது.
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் 80 வேட்பாளர்கள் மட்டுமே 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளனர்.
முதல் சுற்று தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தது 12.5 சதவீதத்தைப் பெற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள். இரண்டாவது சுற்றில் அதிக வாக்குகளை பெரும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற ஒரு கட்சிக்கு 289 தொகுதிகள் தேவை. தேசிய பேரணி (RN) கட்சி 240 முதல் 310 இடங்கள் வரை வெல்லலாம் என்றும், புதிய பாப்புலர் ஃப்ரண்ட் 150 முதல் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிபர் மாக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சி 70 முதல் 120 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரான்சின் சிக்கலான தேர்தல் முறையின் காரணமாக முதல் சுற்றின் அடிப்படையில் இரண்டாவது சுற்று முடிவுகளை கணிப்பது சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த சூழலில், இரண்டாம் சுற்று தேர்தல் வருகிற ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் அரசியல் எதிர்காலத்தின் முக்கிய தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.