குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு (CAG) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, மாநில அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் பெண்களின் சேமிப்பு அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நியாயமான கட்டணங்கள்: பாலினத்தை உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து” என்கிற தலைப்பில் CAG நடத்திய இந்த ஆய்வை, பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) நிர்வாக இயக்குநரான ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
CAG ஆய்வு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு பெண் பயணி மாதம் 800 ரூபாய் சேமித்து வருவதாக கண்டறிந்துள்ளது.
மாதத்திற்கு 20,000 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பெருமளவில் சேமிப்பதாக, அறிக்கை கூறுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனடையும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஆய்வு கணித்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளின் பயன்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில், பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதார பின்னணியை உள்ளடக்கிய 3,000-க்கும் மேற்பட்ட பெண் பயணிகளை நேர்காணல் செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் தாக்கத்தை கண்டறிய சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக CAG கூறியுள்ளது.
சென்னையில் உள்ள பெண் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாதத்திற்கு 1000 ரூபாய் வரை சேமித்தது வருவதாக கூறியுள்ளனர்.
இதுவரை, மாநிலம் முழுவதும் 424 கோடி பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு அரசு 6,788 கோடி ரூபாய் மானியம் செலுத்தியுள்ளதாகவும், பெருநகர போக்குவரத்து கழக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Follow “Spark Media” Channel on WhatsApp