2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், உலக மக்கள்தொகையில் ஒரு புதிய தலைமுறை இணையப் போகிறது. 2025 முதல் 2039 வரை பிறக்கும் குழந்தைகள் ஜெனரேஷன் பீட்டா (Generation Beta) என அழைக்கப்படுவர்.
2035-ல் உலக மக்கள்தொகையில் பீட்டா தலைமுறையினர் சுமார் 16% ஆக இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் 22-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தையும் காணவிருக்கலாம் என்று மக்கள்தொகை ஆராய்ச்சியாளர் மார்க் மெக்ரிண்டில் கூறியுள்ளார்.
Gen Z தலைமுறை (1996-2010), மில்லினியல்கள் (1981-1996), ஜெனரேஷன் ஆல்பா (2010-2024) ஆகிய தலைமுறைகளுக்கு அடுத்ததாக உருவாகும் தலைமுறைதான் பீட்டா தலைமுறை. மனித வரலாற்றில் புதிய சகாப்தங்களை குறிக்க கிரேக்க எழுத்துக்களைக் கொண்டு தலைமுறைகளுக்கு பெயரிடும் நடைமுறை, ஜெனரேஷன் ஆல்பா தலைமுறையிலிருந்து துவங்கியது.
பீட்டா தலைமுறை: தொழில்நுட்ப உலகின் முன்னோடிகள்
பீட்டா குழந்தைகள் (Beta Babies) என அழைக்கப்படவிருக்கும் இத்தலைமுறை, இதுவரை காணாத அளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை அனுபவிக்க உள்ளனர்.
- தானியங்கி போக்குவரத்து (Autonomous Transportation)
- அணியக்கூடிய சுகாதார சாதனங்கள் (wearable health technologies)
- அதிவேக மெய்நிகர் சூழல்கள் (immersive virtual environments)
இவை பீட்டா தலைமுறையின் அன்றாட வாழ்க்கையின் பகுதிகளாக மாறும்.
“AI மற்றும் தானியங்கி முறைகள் முழுமையாக ஒருங்கிணைந்த சமூகத்தில் பீட்டா தலைமுறை வாழ்வார்கள். கல்வி, வேலை, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கில் பல மேம்பட்ட தொழில்நுட்பங்களின் தாக்கம் அவர்களின் வாழ்வை வடிவமைக்கும்” என கூறப்படுகிறது.
பீட்டா தலைமுறையினரின் சவால்கள்
தொழில்நுட்ப வளர்ச்சி பீட்டா தலைமுறையினருக்கு பல சிறப்புகளை வழங்கினாலும், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம் போன்ற முக்கிய சவால்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.
முந்தைய தலைமுறைகள் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை கொண்டிருந்தாலும், அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது பீட்டா தலைமுறையின் பொறுப்பாக இருக்கும். அவர்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்கால சமூகத்தின் வடிவமைப்பில் மிக முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்கள் இடையேயான உண்மையான இணைப்புகள் குறைவடைந்துள்ளன. இந்நிலையில், பீட்டா தலைமுறை புதிய முறைகளால் மனித தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள்தொகை ஆராய்ச்சியாளர் மார்க் மெக்ரிண்டில் கூறியுள்ளார்.
Also Read: புதிய சாதனையை நிகழ்த்த உள்ள இந்தியா! இஸ்ரோவின் SpaDex திட்டத்தின் முக்கியத்துங்கள் என்ன?
85zrf5