முழு நேர அரசியலுக்கு வருவதால் விஜய்யின் கடை படத்திற்கு முந்தைய படமாக இன்று வெளியாகி இருக்கிறது கோட் திரைப்படம். இப்படத்தில் அரசியல் பேசப்படவில்லை என்று படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ஒவ்வொரு படத்தின் போது சர்ச்சைகள் எழுவது உண்டு. அந்த வகையில் இந்த கோட் படத்திற்கு எந்த எதிர்ப்பும் வரக்கூடாது என்பதால்தான் ஆடியோ வெளியீட்டு விழாவைக்கூட நடத்தவில்லை விஜய் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விசிக எம்பி ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
’’The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)’’ என்றும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ராகுல்காந்தி சொல்லித்தான் தவெகவை ஆரம்பித்துள்ளார் விஜய் என்று ஒரு தரப்பினர் சொல்லி வந்தாலும் பாஜக பின்னணியில் தான் விஜய் இயங்குகிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? என்று ரவிக்குமார் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள், ‘’ரவி குமார் என்கிற பெயர் சனாதான கருத்தில்லையா..?
காலமெல்லாம் குமரன் என்றால் காலம் மாறினாலும் குமரனாகவே இருப்பார் என்றுதானே அர்த்தம்.. வயதானா கிழவனாக மாட்டாரா? என்றும் மாறாது என்பதுதானே சனாதானம்.. இதை தெரிந்துதான் இவர் தந்தை அவருக்கு இந்த பெயர் வைத்தாரா..?’’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவிக்குமார் சொன்ன கருத்துக்கு பதில் சொன்ன பாஜக மூத்த தலைவர் தமிழிசை, ‘’சனாதனம் என்றால் என்னவென்று தம்பி ரவிக்குமாருக்கு தெரியுமா?’’ என்று கேட்டிருக்கிறார்.
படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த கேள்வியை எழுப்பி இருப்பதால், தன் கருத்துக்கு எதிராக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், ‘’விஜய் நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது. அரசியலுக்கு வந்ததால் இந்த கேள்வியை கேட்கிறேன்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார் ரவிக்குமார்.