இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து வலை நிறுவனமான Ola cabs, தனது செயலியில் தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கிய Ola Maps-ஐ முழுமையாக செயல்படுத்தி உள்ளது.
இதுவரை Azure மற்றும் Google Map போன்ற பிற நிறுவனங்களின் பயன்பாடுகளை உபயோகித்து வந்த OLA, தான் உருவாக்கிய Krutrim செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவைகளில் இருந்து முழுமையாக வெளியேறியதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பவிஷ் அகர்வால் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், Ola Cabs ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
“கடந்த மாதம் Azure Cloud பயன்பாட்டில் இருந்து வெளியேறிய Ola, இப்போது Google Maps-ல் இருந்தும் முழுமையாக வெளியேறிவிட்டது. மேப்பிங் சேவைக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவழித்த நாங்கள், Ola Maps-க்கு மாறியதால் இந்த மாதம் முதல் செலவினம் குறையும்” என்று பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வரும் மாதங்களில் Ola Cabs செயலியில் Street View, Neural Radiance fields (NERFs), Indoor Images, 3D வரைபடங்கள் மற்றும் ட்ரோன் வரைபடங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் Ola Maps-ஐ தனது மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒருங்கிணைக்கும் நோக்கத்தையும் Ola நிறுவனம் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘Krutrim’
தான் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தளமான Krutrim மூலம் தனது பணிச்சுமையை குறைக்க முடிவு செய்த Ola, Microsoft நிறுவனத்தின் Azure உடனான உறவை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த மே மாதம் அறிவித்தது.
மேலும் Azure பயன்பாட்டில் இருந்து வெளியேற விரும்பும் வேறு எந்த டெவலப்பர் நிறுவனங்களுக்கும் ஒரு வருடகால இலவச கிளவுட் பயன்பாட்டை வழங்குவோம் என்றும் Ola தெரிவித்திருந்தது.
கடந்த 2021 அக்டோபர் மாதம் புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வந்த புவிசார் சேவை வழங்குநரான Geospoc நிறுவனத்தை Ola கையகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் Ola Electric நிறுவனத்தின் திட-நிலை பேட்டரிகள்
இதற்கிடையில், Ola Electric நிறுவனம் அதன் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு திட-நிலை பேட்டரிகளை உருவாக்கும் ஆராய்ச்சி ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த புதுமையான பேட்டரிகளை தனது மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒருங்கிணைக்கவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்த பேட்டரிகளை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவாட்டத்தில் உள்ள தனது புதிய ஜிகாபேக்டரியில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.