
கடந்த 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா உள்பட 12 மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக, 2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு விசாரணையை நிறைவு செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தற்போது அந்த வழக்குத் தொடர்பாக 12 கேள்விகளை முன்வைத்துள்ள உச்ச நீதிமன்றம் அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகள்:
- மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை மாநில அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு, மீண்டும் அதே மசோதாவை மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும்போது அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாமா?
- அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆனுப்பலாமா?
- மாநில அரசின் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா, அல்லது ஆளுநர் ஒரு குறிப்பிட்ட அளவு தனது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து அதைப் பயன்படுத்தலாமா?
- “பாக்கெட் வீட்டோ” என்ற கருத்து என்ன? இது அரசியலமைப்புச் சட்டத்தின் 111, 200 மற்றும் 201 விதிகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதா?
- பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
- மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
- குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
- அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
- மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்வைக்கப்பட்டால், ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும் என்பது கட்டாயமா?
- ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதலை நிறுத்திக்கொண்ட பிறகு, மாநில சட்டமன்றம் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு முன்வைத்தால், அது மசோதாவின் புதிய நிறைவேற்றமாக கருதப்படுமா?
- குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியலமைப்பு மூலம் கையாள்வது எப்படி?
உள்ளிட்ட 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.