அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப ஆகும் காலதாமதத்தை பொறுத்தவரையிலும் அதிமுக ஆட்சியின் நிலையே திமுக ஆட்சியிலும் தொடர்கிறது என்ற விமர்சனம் இருக்கவே செய்கிறது.
4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மருத்துவத்துறையில் 21 பிரிவுகளில் உள்ள 3,645 காலிப்பணியிடங்களை நிரப்ப டிசம்பருக்குள் தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கும் முதன்மையர்களை உடனடியாக நியமிக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலழைக்கழங்களின் துணை வேந்தர் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் சூழலில் இந்த முதன்மையர் பணியிடங்களாவது நிரப்பப்பட வேண்டும் என்றும் அவ்வப்போது அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த விமர்சனங்கள் இனி எழாத வண்ணம் இந்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு. வழக்கம் போல் ஓய்வு பெற்ற அதிகாரியை நியமனம் செய்யாமல், வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாடு தேர்வாணையத்திற்கு வருவாய்த்துறை ஆணையராக இருந்த எஸ்.கே. பிரபாகரை நியமனம் செய்துள்ளது அரசு. இதனால் எதிர்பார்க்கப்பட்டது போலவே அரசு பணியாளர் தேர்வாணையம் மும்முரமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து துறைவாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் முன்பு போல் அல்லாமல் விரைந்து வெளியிட முடிவு செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
2030 ஆண்டிற்குள் 82 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாமாக உயர்த்த திட்டமிட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலைவாய்ப்பின்மை எனும் நிலை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கில், தனியார் துறைகளில் மட்டுமல்லாது அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றாண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 77 ஆயிரம் அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் அறிவித்த அந்த 77 ஆயிரம் அரசுப்பணியிடங்கள் நிரப்பும் இலக்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இன்னும் 17 மாதங்களில் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தால் அரசு பணியிடங்கள் மீது நிலவும் அதிருப்திகள் விலகும்.