நடிகர் சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதன் 2-வது பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கெளதம் மேனன் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் – தனுஷ் காம்போ எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோலவே சிம்பு – கெளதம் மேனன் காம்போவும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. இவர்களது காம்போவில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்திற்கான லீடுடன் முதல் பாகம் நிறைவு பெற்றது மட்டுமில்லாமல், இரண்டாம் பாகம் கட்டாயம் வெளிவரும் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இதனை நம்பி காத்திருந்து இரண்டு வருடங்களும் கடந்து விட்டது என ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கெளதம் மேனன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
இன்று வெளியாகும் ‘ஜோஷுவா’ திரைப்பட புரமோஷனுக்கு இடையில், கெளதம் மேனனிடம் ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மேனன், தானும் ஜெயமோகனும் சேர்ந்து இரண்டாம் பாகத்திற்கான கதையை முன்பே உருவாக்கி விட்டதாக கூறினார்.
மேலும், சிம்புவிற்கும் தயாரிப்பாளர் வேல்ஸ்-க்கும் இடையே பிரச்சனைகள் இருப்பதாகவும் அது தீர்ந்து விட்டால் ‘வெந்து தணிந்தது காடு 2’ படபிடிப்பு தொடங்கிவிடும் எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ள நிலையில், அவர்கள் பிரச்சனை எப்போ முடிஞ்சு, எப்போ ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி, என்னைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.