முதுமை மற்றும் மகன் மனோஜ் மரணத்தாலும் உடல் மற்றும் மனம் நலிவடைந்து போயிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. அவருக்கு நினைவுகள் தப்பியிருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பே பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் வருத்தப்பட்டிருந்தார்.
மூச்சுத்திணறல் , சுவாசப்பிரச்சனைகளால் கடந்த 27ம் தேதி அன்று உடல்நிலை மோசமானதால் தி.நகரில் உள்ள மருத்துவமனையில் மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாரதிராஜா நலம்பெற வேண்டி அவரது நண்பர் கவிஞர் வைரமுத்து, உருக்கமுடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

’’இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார். நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார். உடைந்த சொற்களாயினும் உரக்கப்பேச ஆசைப்படுகிறார். ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன். என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார். அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள்!
45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம்எங்கள் உள்ளங் கைகளுக்கிடையே நசுங்கியது நான் மட்டுமா? கருவேலங்காட்டுக் கரிச்சான்களும் அவர் நலம் கேட்குமே! எங்கள் கிராமத்துச்சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே! வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா!
‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக‘ ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று’’.
