குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சிறப்பு NDPS நீதிமன்றம், 1996-ம் ஆண்டில் பதியப்பட்ட போதைப்பொருள் வழக்கில் முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று (மார்ச் 28) உத்தரவிட்டுள்ளது.
NDPS சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் சஞ்சீவ் பட் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.4.86 லட்சம் அபராதத்தையும் விதித்து நீதிபதி என்.தக்கர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக 1990-ம் ஆண்டு பிரபுதாஸ் வைஷ்னானி என்பவரின் கஸ்டடி மரண வழக்கில் கடந்த 2019-ல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் சூழலில், இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மேலும், நேற்று (மார்ச் 28) சஞ்சீவ் பட்டுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில், கஸ்டடி மரண வழக்கில் ஆயுள் தண்டனைமுடிந்த பிறகே, போதைப்பொருள் வழக்கில் 20 ஆண்டுகால தண்டனையை அனுபவிக்கத் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
‘பின்னணி’
சஞ்சீவ் பட் குஜராத் கேடரின் இந்திய காவல் பணியின் (IPS) முன்னாள் அதிகாரி ஆவார். IIT பாம்பேயில் MTech பட்டப்படிப்பை முடித்த சஞ்சீவ் பட், 1988-ல் IPS பணியில் சேர்ந்தார்.
கடந்த 1990-ல் ஜாம்நகரில் நடந்த ஒரு கலவரத்தில் 150 பேரை கைது செய்தபோது, கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சஞ்சீவ் பட் பதவியில் இருந்தார்.
கலவரத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர், சில நாட்களுக்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பிரபுதாஸ் வைஷ்னானியின் உயிரிழப்புக்கு, சிறையில் அவரை சித்திரவதை செய்யப்பட்டதே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி, வழக்குத் தொடர்ந்தனர்.
சுமார் 29 ஆண்டுகளாக ஜாம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அந்த வழக்கில் கடந்த 2019-ல் சஞ்சீவ் பட் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 1996-ல் பனஸ்கந்தா மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட், வழக்கறிஞர் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டேலில் 1.5 கிலோ ஓபியத்தை வைத்து அவருக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சிறப்பு NDPS நீதிமன்றம் சஞ்சீவ் பட் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்து, 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
‘குஜராத் கலவரம்’
முன்னாள் IPS அதிகாரியான சஞ்சீவ் பட் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்பட்டவர்.
2002 குஜராத் கலவரத்தில் மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சாட்சிப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
மோடிக்கு எதிராக நேரடியாக குற்றம் சாட்டியதால், சஞ்சீவ் பட் பின்னர் செய்திகளில் பரவலாக அறியப்பட்டார்.
மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘முஸ்லிம்’ சமூகத்திற்கு எதிராக ‘இந்து’ சமூகத்தினரை வன்முறைக்குத் தூண்டுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மோடி உத்தரவிட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.
இருப்பினும், இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட SIT விசாரணையில் சஞ்சீவ் பட் அத்தகைய கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்றும் அவரின் குற்றச்சாட்டுகள் சித்தரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, கடந்த 2012-ல் IPS சேவையில் இருந்து சஞ்சீவ் பட்டை சஸ்பெண்ட் செய்து குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது.
தற்காலிகமாக பணி நீக்கத்தில் இருந்த அவரை, கடந்த 2015-ஆம் ஆண்டில் IPS சேவையில் இருந்து நிரந்தரமாக நீக்கி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன் பின்னரே, அவர் மீது பதியப்பட்டிருந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் குறித்த விசாரணை விரைவாக நடைபெற தொடங்கியது.
இந்த சூழலில் நேற்றைய தீர்ப்புக் குறித்து அவரது குடும்பத்தினர் X தளத்தில் கூறுகையில், சஞ்சீவ் பட் செய்யாத குற்றத்திற்காக ஆட்சியாளர்கள் மரணத்தையும் மீறிய கொடுமைகளை செய்ய நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, சஞ்சீவ் பட்டை குறிவைத்து ஆட்சியாளர்கள் துன்புறுத்தி வருவதாகவும், நீதித்துறையின் துஷ்பிரயோகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சஞ்சீவை விலை கொடுக்க வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
‘சஞ்சீவ் பட்டின் குடும்பத்தினரான நாங்கள், இதை எதிர்த்து எங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம்’, எனவும் தெரிவித்துள்ளனர்.
ஒரு சமூகமாக இதற்கு குரல் எழுப்பாமல், உங்களுக்காக உண்மையின் பக்கம் நின்ற சஞ்சீவ் பட்டை பாதுகாக்கத் தவறும்பட்சத்தில், ஆட்சியாளர்களுக்கு எதிராக சஞ்சீவ் காட்டிய துணிச்சலை எதிர்காலத்தில் யாரும் காட்ட மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆட்சியும் அதன் அடியாட்களும், அதிகார போதையில் அரசை எதிர்ப்பவர்களை நசுக்குவதற்கும், தங்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் கொடுக்கத் துணியும் குரல்களை அடக்குவதற்கும் உறுதியாக உள்ளதாக, சஞ்சீவ் பட் குடும்பத்தினர் கவலைகளை வெளிப்படுத்தி X தளத்தில் பதிவு செய்துள்ளனர்.