அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட 27 பேர் செப்டம்பர் 9ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. குட்கா முறைகேடு வழக்கில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்கப்பட்ட புகாரில் டெல்லி சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்.
இந்த விசாரணையில் உணவு பாதுப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த 6 பேர் மீதும் சென்னை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ. இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் மற்றும் மத்திய, மாநில உயரதிகாரிகள் 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணைக்காக குட்கா குடோன் உரிமையாளர்களும், மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ஆஜராகி இருந்தார்கள்.
இந்த நிலையில், குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கரும், பி.வி.ரமணாவும் செப்டம்பர் 9 ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருக்கிறது சிறப்பு நீதிமன்றம். மேலும், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அதிகாரிகள் என்று 27 பேரும் செப்.9ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9ம் தேதி அன்று விசாரணைக்காக ஆஜராகும் அனைவருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மாஜி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வந்திருக்கும் சம்மனால் கலக்கத்தில் உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.