திரையிசை உலகில் இமானுக்கு பிறகு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். 11 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு தனது காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக எக்ஸ் தளம் மூலமாக அறிவிப்பு செய்திருக்கிறார். சைந்தவியும் தனது எக்ஸ் தளம் மீலமாக இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து அறிவிப்புகளில் உள்ள 6 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் என்று சொன்னால் கூட அதற்கு வாய்ப்பில்லை, 2 வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. வழக்கறிஞர் அச்சடித்துக்கொடுத்த அந்த அறிவிப்புகளில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் அறிவிப்பு கடிதத்தில், அவரது பெயரும், உள்ளே சைந்தவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று சைந்தவியின் அறிவிப்பு கடிதத்தில், அவரது பெயரும், உள்ளே ஜி.வி.பிரகாஷ்குமார் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்த்திபன் -சீதா, ராமராஜன் -நளினி , ரேவதி – சுரேஷ்மேனன், பிரபுதேவா -ரமலத், பிரகாஷ்ராஜ் – லலிதாகுமாரி, அமலாபால் – ஏ.எல்.விஜய், சமந்தா -நாகசைதன்யா, தனுஷ் -ஐஸ்வர்யா, திலீப் -மஞ்சுவாரியார் என்று திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களின் பிரிவுகள் தொடர்கின்றன.
இசையமைப்பாளர் இமான் தனது மனைவியை பிரிந்த அதிர்ச்சியில் இருந்த இசை ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் -சைந்தவி இசைத்தம்பதிகளின் பிரிவு பேரதிர்ச்சி. தனுஷ் -ஐஸ்வர்யா போலவே இருவரும் தங்களது பிரிவை எக்ஸ் தளத்தின் மூலமாக அறிவித்துள்ளனர். அவர்களைப்போலவே இவர்களும் என்ன காரணத்தினால் பிரிகிறோம் என்று சொல்லவில்லை. ஆனால், தனுஷ் – ஐஸ்வர்யா போலவே இவர்களின் அறிவிப்பும் உள்ளது.
நீண்ட யோசனைக்கு பின்னர் இருவரும் 11 வருட திருமண உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு இந்த முடிவு சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறோம். எங்களுடைய அமைதிக்காகவும், நன்மைக்காகவும் பிரிகிறோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை அப்படியே இருக்கும் என்கின்றனர்.
இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் நடிகராக ஜி.வி.பிரகாஷ்குமார் அவதாரம் எடுத்ததில் இருந்தே, அதுவும் அவர் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள், கேரக்டர்களில் இருந்தே சைந்தவிக்கும் பிரகாஷ்க்கும் இடையே மனக்கசப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு கட்டத்தில் அதிகமாகவே இருவரும் கடந்த 6 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சைந்தவியும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் தனித்தனி பாதைகளில் சுதந்திரமாக செல்ல முடிவெடுத்தது போலவே இவர்களின் முடிவு என்கிற அறிவிப்பும் உள்ளது. தங்கள் இஷ்டப்படி வாழ இடையூறாக இருக்கிறது திருமண பந்தம் என்பதால்தான் அந்த இடையூறுகளை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால்தான், நாங்கள் இருவரும் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு இந்த முடிவு என்று அறிவித்து விடுகின்றனர். ஆனால், தங்களின் குழந்தைகள் – அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் இந்த முடிவை எடுத்து விடுகின்றனர் என்கிறார்கள் விமர்சகர்கள்.