அந்த ‘Admin’ எச்.ராஜாதான் என்று உறுதி செய்த சென்னை சிறப்பு நீதிமன்றம், குற்றவாளி என்று அறிவித்து, 1 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது நீதிமன்றம். ஆனால், மேல்முறையீடு செய்ய அவகாசம் கேட்டு அதுவரையிலும் ஓராண்டு தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில். இன்று திரிபூராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை.’’ என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
அதேப்போன்று ஏப்ரல் மாதத்தில் கனிமொழி எம்.பி. குறித்து தரக்குறைவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா. இதனால் கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்தன.
திமுகவினரும், திகவினரும் அளித்த புகாரில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கனிமொழி எம்.பி. குறித்த விமர்சனத்திற்கு ஈரோடு நகர காவலதுறையும், பெரியார் சிலை குறித்த விமர்சனத்திற்கு ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணியில், தான் அந்தப்பதிவை போடவில்லை என்றும், தனது அட்மின் தான் போட்டார் என்றும் எச்.ராஜா விளக்கம் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் மூன்று முறை மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதன்பின்னர் இரண்டு வழக்குகளின் விசாரணையையும் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
பல்வேறு வாதங்களுக்கு பின் எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. அவர்தான் அந்த அட்மின் என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு வழக்குகள் தொடர்பான 41 பக்க தீர்ப்பில், எச்.ராஜா குற்றவாளி என்றும், அவருக்கு தலா 6 மாதம் சிறை என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது நீதிமன்றம்.
உடனே எச்.ராஜா, இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும். அதற்கு ஒரு வருடம் அவகாசம் வேண்டும் என்றும் கேட்க, நீதிபதி அதற்கு அனுமதி அளித்துள்ளார். மேலும், சொந்த ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.