
தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் நடந்த பிஎம் ஶ்ரீ பள்ளி நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாகூர் அறிவியலோடு விளையாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
முதன் முதலில் விண்வெளியில் பயணித்தது யார்? என்ற கேள்வியை மாணவர்கள் முன்பு கேட்க, அவர்கள், ‘’நீல் ஆம்ஸ்ட்ராங்’’ என்று சொல்ல, ‘’இல்லை, அது அனுமன் என நினைக்கிறேன்’’ என்று சொன்னதும் மாணவர்கள் அதிர்ந்தனர்.
தொடர்ந்து பேசிய அனுராக் தாக்கூர், ‘’நமது பாரம்பரியம், கலாச்சாரம், அறிவை பாடப் புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும். இதை எல்லாம் மறந்து ஆங்கிலேயர் காட்டியவாறே நாம் இருக்கிறோம். முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன் தான். நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை’’என்று சொன்னதும் மாணவர்களும் ஆசியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பாஜக எம்.பியின் இந்த பேச்சு அறிவியலை விழுங்குவதாக உள்ளது என்று நாடெங்கிலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
‘’அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல, வகுப்பறைகளில் மாணவர்களை தவறாக வழி நடத்துவது அரசியலமைப்பில் உள்ள பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை அவமதிக்கும் செயல்’. பள்ளி மாணவர்களிடம் புராணங்களைக் கூறி அறிவியலுக்கு புறம்பான கருத்து தெரிவித்து தவறாக வழிநடத்துவது வருத்தமளிக்கிறது. அனுராக் தாக்கூரின் இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வி அறிவுக்கு இழுக்காக அமைந்திருக்கிறது’’ என்கிறார் கனிமொழி எம்.பி.
’’முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல’’ என்று சொல்லும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ‘’ பாஜக வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.

நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்’’என்று கடுமையாக சாடி இருக்கிறார்.
உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் என்ற அனுராக் தாக்கூரின் இந்த பேச்சினால் எக்ஸ் தளத்தில் #Hanuman என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி இயக்குவதாகவும், அனுராக் தாக்கூர் எம்.பி. விண்வெளியில் பறப்பதாகவும் படங்களையும் டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.