நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உள்பட 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடந்த இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் கடந்த 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்களை எடுத்திருந்தனர். அரியானா மாநிலத்தில் பரிதாபாத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 6 பேர் 720/720 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேசிய தேர்வு முகமை.
முறைகேட்டில் பாஜக தலைவர் சிக்கி இருக்கிறார். அரியானா மாநிலத்தில் பாஜக தலைவரின் குடும்பத்திற்கு சொந்தமான ஹர்தயாள் பப்ளிக் பள்ளி சிக்கி இருக்கிறது. இந்த மையத்தில் 500க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். இதில் 6 பேர் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தவிர, 2 பேர் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். கணக்குப்படி இந்த ரிசல்ட் சாத்தியமில்லை என்று சொல்லப்படுகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்வுத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் தடுக்கப்படும் என்று தேர்தலின் போது மோடி உத்தரவாதம் அளித்திருந்தார். அந்த உத்தரவாதம் எல்லாம் காற்றில் போனது. தேர்வுத்தாள் கசிவை தடுக்கம் சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் இயற்றியது. பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை அச்சட்டத்தில் வழி வைகை உள்ளது. ஆனால், நீட் தேர்வில் இத்தனை தில்லுமுல்லுகள் நடந்தும் பாஜக ஆளும் மாநிலத்தின் காவல் துறையையும் நிர்வாகத்தையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை.
இந்த விவகாரத்தில் ஜாஜ்ஜார் காவல் நிலையத்திலோ உள்ளூர் காவல் நிலையத்திலோ எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக ஜஜ்ஜாய் துணை ஆணையர் சக்தி சிங்கை தொடர்புகொண்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்கிறது தி வயர்.
ஹைர்தயாள் பள்ளியின் தலைவர் அனுராதா யாதவ். பஹதுர்கரில், ஹர்தயாள் குடும்பம் செல்வாக்கான குடும்பம். அனுராதாவின் மருமகன் சேகர் யாதவ், பாஜக யுவ மோர்ச்சாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தலைவர். இவர் ரோஹ்தக்கின் முன்னாள் பாஜக எம்.பி. அரவிந்த் சர்மாவுக்கு நெருக்கமானவர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரோகித் சர்மாவுக்காக பிரச்சாரம் செய்துள்ளார் சேகர் யாதவ். இவர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார் என்று தகவல்.
பாஜக சார்பில் போட்டியிட முயன்று வருவதாக தி வயருக்கு சொல்லி இருக்கும் சேகர் யாதவ், நீட் முறைகேடுக்கும் தங்கள் பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்துள்ளார். மேலும், தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது ஹர்தயாள் பள்ளி என்றாலும் அந்த பள்ளிக்கும் தனக்கும் எந்தவிதம் சம்பந்தமும் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
சேகர் யாதவ்வின் மனைவி நேஹா யாதவ்வும் பாஜகவில் இணைந்துள்ளார் என்றும், 2022ல் பஹதுர்கர் முனிசிபல் கவுன்சில் தலைவராக, பாஜகவின் வேட்பாளராக தன்னை நினைத்துக்கொண்டு பாஜகவின் சாதனைகள், கொள்கைகளை அச்சிட்டு துண்டு பிரசுரம் விநியோகித்தார் நேஹா. ஆனால், பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்கிறது தி வயர்.
ஹர்தயாள் பப்ளிக் ஸ்கூல் தலைவர் அனுராதா யாதவ்வும் பாஜகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரங்களை செய்துள்ளார்.
முறைகேடு தொடர்பாக தி வயர் அனுராதா யாதவ்வை அணுகியபோது அவர் கருத்து சொல்ல மறுத்துள்ளார்.
2023 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலின்போது கேள்வித்தாள் கசிவு தொடர்பாக அப்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார் மோடி. ஆனால் இப்போது ஆளும் அரியானாவில் ஹர்தயாள் தேர்வு மையத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார் என்கிறது வயர்.
ஜஜ்ஜாரில் மாவட்டத்தில் உள்ள ஹர்தயாள் பப்ளிக் ஸ்கூல், விஜயா சீனியர் செகண்டரி ஸ்கூல், எஸ்.ஆர்.செஞ்சுரி பப்ளிக் ஸ்கூல் ஆகிய 3 பள்ளிகளில் முதன்முறையாக நீட் தேர்வு நடந்தன. இதில் எஸ்.ஆர்.செஞ்சுரி மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு சுமூகமாக நடந்துள்ளன. ஹர்தயாள் மற்றும் விஜயா ஸ்கூலில் மட்டும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. நீட் போன்ற முக்கியமான வினாத்தாள்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்படுவது வழக்கம். ஜஜ்ஜார் மையங்களுக்கு 2 செட் வினாத்தாள்கள் இருந்துள்ளன. ஒரு செட் எஸ்.பி.ஐ. வங்கியிலும், இன்னொரு செட் கனரா வங்கியிலும் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் 2 செட் வினாத்தாள்கள் இருக்கும். ஒரு செட் மாணவர்களுக்கு வழங்கப்படும். வினாத்தாள் கசிந்துவிட்டால் இன்னொரு செட் வினாத்தாள் வழங்கப்படும். ஆனால் இந்த இரு மையங்களிலும் 2 செட் வினாத்தாள்களும் வழங்கப்பட்டுள்ளன. இதை கண்டறிந்த தேர்வு மைய ஊழியர்கள் எஸ்.பி.ஐ. வங்கி செட்களை திரும்ப பெற்றுக்கொண்டு கனரா வங்கி செட்களை கொடுத்துள்ளனர். இதில் எங்கே தவறு நடந்தது என்றால், நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி செட் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த 2 மையங்களிலும் மட்டும் கனரா வங்கி செட் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குளறுபடியினால் இந்த 2 மையங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்களின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.ஐ. வங்கியின் வினாத்தாளை விட கனரா வங்கியின் வினாத்தாள் கடினமானதாக இருந்ததாக மாணவர்கள் சொல்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க, பொதுவாக நீட் தேர்வில் 1 அல்லது 2 மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும். 2021 ல் நடந்த தேர்தலில் மட்டுமே 3 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றனர். ஆனால், ஹர்தயாள் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் 100 சதவிகித பெண்களும், 2 மாணவர்கள் 718,719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 1,563 விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வழங்கப்பட்ட நிலையில், ஹர்தயாள் பள்ளியில் 100 % மதிப்பெண் எடுத்த 6 மாணவர்களுக்கும், 718,719 எடுத்த மாணவர்களுக்கும் இந்த கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் நேரமின்மையால் என்.டி.ஏ.வுக்கு விண்ணப்பத்திருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. அப்படியானால் ஆஃப் லைன் தேர்வில் எந்தெந்த மாணவர்களின் நேரம் எவ்வளவு வீணடிக்கப்பட்டது என்பதை என்.டி.ஆர் எப்படி கண்டுபிடித்தது? என்ற கேள்வியை எழுப்புகிறது தி வயர்.
ஹர்தயாள், விஜயா பள்ளி மையங்களில் நேரம் இழந்திருக்கும் நிலையில், ஹர்தயா பள்ளி மைய மாணவர்களுக்கு மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என்கிறது வயர். அதே நேரம் ஹர்தயாள் மையத்தில் அனைத்து மாணவர்களும் நேரத்தை இழந்திருக்கும் நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பத்தவர்களுக்கு மட்டுமே கருணை மதிப்பெண்கள் என்றால், விண்ணப்பிக்காமல் இருக்கும் மாணவர்களை புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற கேள்வியை எழுப்புகிறது வயர்.