யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் அதிகாரமிக்க நபர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொல்லி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதுகுறித்து அவர் மேலும் விபரங்கள் சொல்லாமலும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் (வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சிபிசி விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மனு அனுப்பி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் அந்த அதிகாரமிக்க நபர்கள் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன்.
‘’அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுப்பது இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படையாக ஒரு நீதிபதியே சொல்கிறார். உயர் அதிகாரமிக்கவர்கள் நீதிபதியை நேரில் சந்தித்து இந்த வழக்கை விசாரிக்காதீர்கள் என்று சொன்னால், அது நீதிமன்ற அவமதிப்பு. அதனால் தனக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? என்பதை அவர் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும்’’ என்கிறார் ஹரி பரந்தாமன்.
அவர் மேலும், ‘’எங்கே வந்து என்ன சொல்லி அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
யானை ராஜேந்திரன் மனுவின் படி உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ நடவடிக்கை எடுத்தால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கப்படுவார். ஆனால், அவரே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ரொம்ப சீரியசான விசயம்.
நீதிமன்றத்தின் நடவடிக்கையில் குறுக்கிட்டால் அது தவறு. யார் தலையிட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கும் ஹரி பரந்தாமன், ‘’முதலில் அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கு சொல்லியே ஆகவேண்டும்’’ என்கிறார் அழுத்தமாக.