கொல்கத்தாவில் மருத்துவ முதுநிலை இரண்டாமாண்டு பயின்ற பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்குள்ளாகி, கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு இந்தியா முழுவதும் போராட்ட அலைகளை எழுப்பியிருக்கிறது. மருத்துவமனையில் பணிப் பாதுகாப்பு இல்லாத நிலையையும், பெண் மருத்துவர்கள் திட்டமிட்டு இலக்காக்கப்படுவதையும் கண்டித்து டாக்டர்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினரும் போராட்டக் களம் கண்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அரசியல் கட்சிகள் அணிவகுத்து நிற்க, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர். இதையடுத்து, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மை அறியும் சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
மலையாள சினிமா உலகில் பிரபலமாக இருந்த ஒரு நடிகை சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து புகார் அளித்தார். கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்தப் புகார் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, திரைத்துறையில் நடைபெறும் பாலியல் கொடூரங்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையாளத் திரைப்பட சங்கங்கள், குறிப்பாகத் திரைத்துறையில் உள்ள பெண்கள் குரல் எழுப்பினர். கேரள அரசும் இதற்கான விசாரணைக் குழுவை அமைத்தது. அதன் விசாரணை அறிக்கை விவரம் இப்போது வெளியாகியிருக்கிறது.
மலையைளத் திரையுலகில் செல்வாக்காக இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பிடியில் திரைத்துறை முழுமையாக இருப்பதால், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறைப் பெண்கள் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாவது மிக அதிகமாக உள்ளது என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
திரைத்துறைக்குள் நுழைவதற்கே பாலியல் ரீதியான உடன்பாடுகள் கட்டாயமாக்கப்படுவதாகவும், நடிகைகளுக்கு படத்தில் அளிக்கப்படும் கதாபாத்திரங்களுக்கேற்ப அவர்கள் பாலியல் உடன்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவித்திருப்பதுடன், இது பற்றி புகார் அளிப்பதற்கோ, நடந்ததை தெரிவிப்பதற்கோ நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் மிகவும் பயப்படுகிறார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவிகள் என்.சி.சி. முகாமுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு மாணவிக்கு அதிகாலையில் சம்மன் அனுப்பப்பட்டு, என்.சி.சி. பயிற்சியாளர் அறைக்கு அழைக்கப்பட்டு, அங்கு பாலியல் கொடுமைக்குள்ளாகி இருக்கும் அதிர்ச்சித் தகவல், அந்த மாணவி தன் தாயான அதே பள்ளியின் ஆசிரியரிடம் தெரிவித்த பிறகே அம்பலமாகியிருக்கிறது.
விசாரணையில், அது உண்மையான என்.சி.சி. கேம்ப் அல்ல என்றும், போலி பயிற்சியாளருக்கு தனியார் பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்றும் கேள்வி எழுந்துள்ளது. பாலியல் கொடுமைக்குள்ளான மாணவி தனக்கு நேர்ந்ததை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, அதனை மறைப்பதற்கே நிர்வாகம் முயற்சி செய்தது என்றும் தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு இரவு நேரத்தில் பேருந்தில் ஏற்பட்ட பாலியல் கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகே, பாலியல் கொடூரங்களைத் தடுப்பதற்கான சட்ட நெறிமுறைகளும், கடுமையான தண்டனைகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாயின. ஆனால், அதன்பிறகும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
பணியில் உள்ள பெண்களுக்கு நிறுவனங்களில் உள்ள ஆண் அதிகாரிகள் தரும் தொல்லைகள், பள்ளி-கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களின் சீண்டல்கள், திரைத்துறையில் உள்ள நடிகைகளை தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர்கள் கையாளும் முறைகள், தனியே உள்ள பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பெண்களுக்குமான பாதுகாப்பு குறித்த கேள்வியும் அச்சமும் பெருகியுள்ளது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பா.ஜ.க. அணுகிய நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இந்தியா கூட்டணித் தரப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தகைய அரசியல் பார்வைகளைத் கடந்து, பெண்களின் பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படுவதுடன், விரைவு நீதிமன்றங்கள் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய கொடூரங்களுக்குத் தீர்வு காண முடியும்.
பாலியல் குற்றவாளிகள் பலருக்கும் அரசியல் செல்வாக்கு இருக்கிறது. பல நேரங்களில் குற்றவாளிகளே அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். சட்டம் வளைந்து நெளிகிறது.