‘டெல்லி சலோ’ என்கிற பெயரில் வட மாநில விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.
ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து டெல்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP), ஒன்றிய அரசு சட்டரீதியான உத்தரவாதங்களை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, ஒன்றிய அரசுடன் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு, விவசாய உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிக சட்டம், விவசாயிகள் விலை உறுதி ஒப்பந்தம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு வருட காலம் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த 3 சட்டங்களையும் இறுதியாக ஒன்றிய அரசு ரத்து செய்தது.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
- விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்
- குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குதல்
- 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவும், கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்
- அக்டோபர் 2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல்
- உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் (WTO), அனைத்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்தும் அரசு விலகுதல்
- விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்
- டெல்லி போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
- மின்சாரத் திருத்த மசோதா 2020 ரத்து செய்தல்
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் ஆண்டுக்கு 200 (100 நாட்களுக்குப் பதிலாக) நாட்கள் வேலை வாய்ப்பு, தினசரி ஊதியம் ரூ. 700 வழங்குதல்
- போலி விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதித்தல்
- மிளகாய் மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களுக்கு தனி தேசிய ஆணையம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த முறை, சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராத) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகளின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் மற்றும் சர்வான் சிங் பாந்தரின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் ஆகியோர் ‘டெல்லி சலோ 2.0’ போராட்டத்தை வழி நடத்தி வருகின்றனர்.
கடந்த முறை, 2020 போராட்டத்தின் விளைவாக 3 விவசாய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றாலும் MSP-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கவில்லை.
‘டெல்லி சலோ 2.0’ பேரணி தொடங்குவதற்கு முன்பே, அரசு பேச்சுவார்த்தைகளை தொடங்கி இருந்தது. விவசாயிகள் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு இடையேயான முதல் பேச்சுவார்கதைகள் பிப்ரவரி 8ஆம் தேதியும், இரண்டாவது முறையாக பிப்ரவரி 12ஆம் தேதியும் நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்கதைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.
2020-ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது தலைநகர் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
டெல்லி முழுவதும் அடுத்த மாதம் மார்ச் 12-ம் தேதி வரை 144-வது சட்டப்பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் முட்கம்பிகள், சிமென்ட் தடுப்புகள், ஆணிகளை பொருத்தி டெல்லிக்கான அனைத்து அணுகலையும் ஹரியானா மாநில அரசு தடைசெய்தும, பஞ்சாப் உடனான தனது எல்லைகளை மூடியும் உத்தரவிட்டுள்ளது.