பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ், அபுதாபியில் நேற்று நடந்த IIFA விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இவர் ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ எனும் கன்னட படத்தினை இயக்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டிற்கான IIFA விருது விழாவில் பங்கேற்க இவரையும் படக்குழுவினரையும் அழைத்திருக்கிறார்கள். தனக்கும் விருது என்று ஹேமந்த் ராவும், படத்தின் இசையமைப்பாளர் சரண் ராஜூவும் சென்றிருக்கிறார்கள். படக்குழுவினரும் சென்றிருக்கிறார்கள்.
விழாவில் ஹேமந்த் ராவுக்கும், சரண்ராஜுக்கு விருது வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது தங்களை ஏன் அழைக்க வேண்டும்? என்று வெடித்திருக்கிறார் ஹேமந்த் ராவ். அவரின் சமூக வலைத்தளப்பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘’நான் கடந்த 10 ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளேன். IIFA விருது விழா எனக்கு மோசமான ஒரு அனுபவத்தை தந்திருக்கிறது. ஒரு மிகப்பெரிய அவமானத்தை தந்துவிட்டது.
விருது விழாவிற்காக நாடு கடந்த கலைஞர்களை அழைத்து வந்து இப்படி மோசமாக நடத்துகிறார்கள். எனக்கு எந்த ஒரு விருதும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள அதிகாலை 3 மணி வரைக்கும் உட்கார வைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது. என் இசையமைப்பாளர் சரண் ராஜூவுக்கும் இதே நிலைமைதான்’’ என்று குமிறியிருக்கும் அவர்,
IIFA விருது விழாக்குழுவை பார்த்து, ‘’இது உங்கள் விருது. நீங்கள் அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் விருது கொடுக்கப்படாத என்னை அழைத்து ஏன் காக்க வைத்தீர்கள்? நாமினேட் செய்யப்பட்ட அனைவரையும் அழைத்திருந்தால் கூட அதில் பிரச்சனை இல்லை. என்னை மட்டும் அழைத்ததால் எனக்கு விருது என்ற எண்ணம்தானே வரும்?
இது கூட பரவாயில்லை. விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் யார் என்பதை சொல்லாமல், நேரடியாக விருது அறிவிக்கப்பட்டது ஏன்?’’ வெடித்திருக்கிறார்.
‘’இந்த நிகழ்வில் கலந்து கொண்டது முழுவதுமாக டைம் வேஸ்ட் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் என் படக்குழுவினர் ஒருசிலர் விருதுகள் வாங்குவதை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி’’ என்கிறார்.
இயக்குநரின் இந்த சமூக வலைத்தள பதிவு கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.