
காஷ்மீர், பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிடெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், 2021, செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) பறிமுதல் செய்யப்பட்ட, 2,988 கிலோ ஹெராயின் வருவாயை லஷ்கர்-இ-தொய்பாவிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பாவின் பிரதிநிதி அமைப்பான The Resistance Front (TRF) இயக்கத்தின் கொல்லப்பட்ட உறுப்பினர் லத்தீஃப் ராதர், 2021 டிசம்பரில் முகமது இக்பால் அவான் மற்றும் ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான் மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் காஷ்மீர் பிரச்சினை மற்றும் பிரிவு 370 குறித்து விவாதித்ததாக, முக்கிய சாட்சி கூறியதாக NIA சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி நீதிமன்றத்தில் கூறினார்.

மேலும், மாலிக் என்பவரை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் வசூலிக்கக் கூறியதாகவும், இப்பணம் லஷ்கர்-இ-தொய்பா ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் NIA தெரிவித்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டெல்லியைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் தல்வார் எனும் கபிர் தல்வார் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை எதிர்த்த NIA, “semi-processed talc stones, bituminous coal’ இறக்குமதி செய்வதாகப் போதைப் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளது. அப்பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்விடம் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, சட்டப்பூர்வ ஏற்றுமதி – இறக்குமதி வழிமுறைகளில் உள்ள போதாமையைக் கண்டறிந்து, இம்மாதிரியான கன்சைன்மென்ட்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக அதானியின் முந்த்ரா துறைமுகம் மூலம் இந்தியாவுக்கு ஹெராயினை கொண்டு வந்துள்ளனர். அப்படி அனுப்பப்பட்ட 6 கன்சைன்மென்களில் 6வது கன்சைன்மென்ட் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 2021ல் பறிமுதல் செய்தனர்.

2,988.21 கிலோ ஹெராயின் கொண்ட பெரிய கன்சைன்மென்ட் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானின் Bandar Abbas வழியாக இந்தியாவுக்கு Aashi Trading Company என்ற பெயரில் இறக்குமதி செய்துள்ளனர். இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.21,000 கோடியாகும்.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் வந்திருந்தது குறித்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரும் அறிக்கை அளிப்பதாகக் கூறினார். ஆனால், அன்று இரவே அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
மேற்கொண்டு விசாரணையில், இந்த ‘போதை – பயங்கரவாத’ சதித் திட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானின் ISI மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகள் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஹர்ப்ரீத் சிங் தல்வாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என NIA நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்த சில தினங்களிலேயே நீதி மன்றத்தில் NIA இத்தகைய தகவலை கூறியுள்ளது, பல்வேறு கேள்விகளையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.