முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், உலகில் பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடைபெறுகின்ற நிதி, நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டில் அதானி குழும நிறுவனங்களில் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டினால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20 சதகிதம் சரிவைச் சந்தித்தன.
இது தொடர்பான வழக்கில், இந்த முறைகேட்டினை விசாரிக்கும்படி இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது செபி இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும் செபியே இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதானி குழுமங்களில் செபி தலைவர் மதாபி புரி புச் முதலீடு செய்திருப்படதை ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. மதாபி புரி புச் செபியின் தலைவராக வந்த பின்னர் கடந்த 2022ல் 2 முறை அதானி சந்தித்தது சந்தேகங்களை எழுப்புகிறது என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். அதானியின் மெகா ஊழலை விசாரிக்க செபு தயக்கம் காட்டி வந்ததும் கவனித்திற்குள்ளானது என்கிறார்.
இந்த குற்றச்சாட்டினால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று செபி தலைவர் மதாபி புரி புச்க்கு பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளார் மதாபி புரி புச். அவரும் அவரது கணவரும் அதானி குழுமத்தில் எந்த முதலீடும் செய்யவில்லை என்கிறார். அதே போன்று, அதானி நிறுவனமும் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுக்கிறது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகரும் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டினை மறுக்கிறார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு வெளிநாட்டு சதி என்றும், இக்குற்றச்சாட்டிற்குப் பின்னால் காங்கிரஸ் உள்ளது என்று கூறியிருக்கிறார்.
உலகில் வேகமாக வளர்ந்து வருகின்றன பொருளாதாரத்தில் குழப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம்தான் இத்தகைய குற்றச்சாட்டு என்று சொல்லும் ராஜீவ் சந்திரசேகர், செபி மீது குற்றம் சுமத்தி அதன் மூலம் பங்குச்சந்தையில் குழப்பம் விளைவித்து வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதே வெளிநாட்டுச்சதிகளின் நோக்கமாக இருக்கிறது. இதை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்.
இந்தியாவின் நித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் மற்றும் அதன் ஸ்திரத்தன்மையை ஆட்டம் காணச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஹிண்டன் பர்க் சொல்லும் பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கையில் எடுக்கின்றனர். இதன் மூலமே இதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் தெளிவாகத்தெரிகிறது என்கிறார் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி.
செபி மற்றும் அதானி மீது குற்றம்சுமத்தி இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்து இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருவதாகவும் கூறியிருக்கிறார் சுதன்ஷு திரிவேதி.