
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 15-4-2025 அன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மாநில சுயாட்சியின் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும், இந்தித் திணிப்பு- கல்விக்கான நிதி மறுப்பு-நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிற நிலையில், மாநில சுயாட்சிக்கானத் தேவை இருப்பதை முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையில் விளக்கியுள்ளார்.
ஏறத்தாழ 51 ஆண்டுகளுக்கு முன் 16-4-1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சிக்கான தீர்மானத்தை முன்மொழிந்து, தொடத்ரச்சியான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேறச் செய்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. 1969ல் அவர் முதன்முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது, நீதிபதி ராஜமன்னார் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு, மத்திய-மாநில உறவுகள் குறித்தும், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குகிற அளவில் இந்திய அரசியல் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்றும் அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்தான் 1974ல் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி என்கிற முழக்கத்தையும் தி.மு.க. முன்வைத்தது. சுயாட்சி என்பதை தனிநாடாகப் பிரிந்து போவது என்று அர்த்தப்படுத்திக் கொண்டவர்கள் உண்டு. அது பற்றி விளக்கிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, “இது பிரிவினைவாதத் தீர்மானமல்ல. இந்தியாவை மேலும் வலிமைப்படுத்துகிற தீர்மானம். மத்திய அரசுக்குரிய அதிகாரங்களையும் மாநிலங்களுக்குள்ள் அதிகாரங்களையும் வரையறை செய்வதுதான் மாநில சுயாட்சி” என்பதை விளக்கினார். மத்திய அரசு எதிலும் தன்னிச்சையாக செயல்படாமல் எந்தவொரு சட்டத்தைக் கொண்டு வந்தாலும், திட்டங்களை செயல்படுத்த முன்வந்தாலும் அது குறித்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றுவதும்தான் மத்தியில் கூட்டாட்சி என்பதற்கான விளக்கம் என்றும் அன்றைய முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என நமது அரசியல் சட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தை உருவாக்கும்போது, அன்றைக்கிருந்த சூழலை கவனத்தில்கொண்டு வலிமையான மத்திய அரசு இருந்தால்தான், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மாநில அரசுகள், மத்திய அரசை சார்ந்திருக்கும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டன. சுதந்திரம் பெற்ற 25 ஆண்டுகளுக்குப் பின் பல மாநிலங்களிலிருந்தும் தங்கள் உரிமைகளுக்கான குரல்கள் வெளிப்படத் தொடங்கின.
நேரு காலத்திலேயே மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய், தங்கள் மாநிலத்தின் ஒரு பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றார். 1959லேயே ஆந்திரா மாநில சட்டமன்றத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த வீரேந்திரா பாட்டீல் மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்று தெரிவித்தார். இப்படிப் பல மாநிலங்களிலும் உரிமைகளுக்கான முணுமுணுப்புகள் வெளிப்பட்ட நிலையில்தான், தமிழ்நாட்டில் மாநில சுயாட்சிக்கானத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமருக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டது.
மக்களிடம் நேரடியாகத் தொடர்புடையது மாநில அரசுதான் என்பதால் அதற்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்பதும், மத்திய அரசிடம் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, கரன்சி உள்ளிட்ட முக்கிய துறைகள் மட்டும் இருந்தால் போதும் என்பதும்தான் மாநில சுயாட்சிக்கான எளிய விளக்கம். மண்ணைக் காப்பது மத்திய அரசின் பணி. மக்களைக் காப்பது மாநில அரசின் பணி என்று இதனை விளக்குவார் தமிழ்நாடு அரசின் திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா காலத்திலிருந்தே மாநில சுயாட்சிக்கான குரல் ஒலித்து வருகிறது. இருமொழிக்கொள்கை, சுயமரியாதை திருமணச் சட்டம், கலைஞர் கருணாநிதி காலத்தில் சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமை, மாநிலத் திட்டக்குழு உருவாக்கம் ஆகியவை மாநில சுயாட்சிக் கோரிக்கையின் விளைவுகளே. தற்போது ஆளுநர் 12 மசோதாக்களை கிடப்பில் போட்டிருந்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் மூலம் முக்கியமான தீர்ப்பைப் பெற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அடுத்த சட்டப்போராட்டமாக மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார். எப்போதும் போல உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாடே முன்னிற்கிறது.
மாற்றங்கள் ஒரே நாளில் வராது. மாற்றம் நிகழாமலும் இருக்காது.