
நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? என்பது குறித்து விரிவான தீர்ப்பில் நீதிபதி சொல்லப்போவதால் விரைவில் வெளிவர இருக்கும் அந்த தீர்ப்பு குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது திரைப்பட இயக்குநராக மட்டும் இருந்த சீமான், கடந்த 2008ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு தன்னை திருமணம் செய்ததாகவும், தான் பெரியாரிஸ்ட் என்பதால் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி வந்தார். நாம் தமிழர் கட்சி தொடங்கிய பின்னர் தன்னை புறக்கணித்துவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரி கடந்த 2011ஆம் ஆண்டில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார் நடிகை விஜயலட்சுமி.
இதையடுத்து சீமான் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. அதன் பின்னர் 2012இல் திடீரென்று, அவசர கதியில் தான் புகார் அளித்துவிட்டதாகவும், அதனால் புகாரை வாபஸ் பெறுவதாகவும் போலீசில் கடிதம் அளித்தார் விஜயலட்சுமி. பின்னர் 2023இல் மீண்டும் சீமான் மீது புகாரளித்து அதையும் பின்னர் வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி.

2011ஆம் ஆண்டில் தன் மீது விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சீமான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றுவிட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
விஜயலட்சுமி புகாரினை வாபஸ் பெற்ற பின்னரும் கூட காவல்துறை ஏன் இந்த வழக்கை நடத்துகிறது என்பது சீமான் தரப்பு வாதம்.
இதற்கு, மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக சொல்லி இருந்த விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சீமானும் விஜயலட்சுமியும் திருமணம் செய்துகொண்டார்களா? இரண்டு முறை புகாரளித்து இரண்டு முறையும் விஜயலட்சுமி புகாரினை வாபஸ் பெற்றிருக்கிறார் என்றால், விஜயலட்சுமிக்கு சீமான் ஏதும் உத்தரவாதம் அளித்திருக்கிறாரா? என்று கேள்விகள் எழுப்பினார் நீதிபதி.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், பாலியல் புகார் என்பது சமூக குற்றம் என்பதால் புகாரினை வாபஸ் பெற்றாலும் போலீசார் விசாரணை நடத்தவே செய்வார்கள் என்றார்.
தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி இருக்கிறார் என்று சொன்ன விஜயலட்சுமி, புகாரை வாபச் பெறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார் சீமான் என்றும் கூறியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி சீமான் ஏமாற்றி உள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று வாதிட்டார் அரச தரப்பு வழக்கறிஞர்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி, இந்த வழக்கை சர்வ சாதாரணமாகக் கருதி தள்ளுபடி செய்துவிட முடியாது என்று உத்தரவிட்டு சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் விரிவான தீர்ப்பை விரைவில் பிறப்பிக்கிறேன் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரணை நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கால்வதுறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அந்த விரிவான தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறார் நீதிபதி?