
தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ‘’இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றியமைக்கப்பட்ட முறையான புதிய பட்டியலை இன்னும் நான்கு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்’’ என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த 2020ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழகத்தில் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஏனைய காலிப்பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கான பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடந்து, இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானதில் சர்ச்சை எழுந்தது. இதில் குளறுபடி நடந்துள்ளது. இட ஒதுக்கீடு சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கவில்லை. இந்த மாணவர்களை ஆசிரியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து, சென்னையைச் சேர்ந்த நிர்மல்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

கடந்த 29.2.2024 அன்று நீதிபதி மஞ்சுளா அமர்வு முன்பாக இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ‘’கடந்த 2020ல் நடந்த மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தில் முறையான இட ஒதுக்கீடு சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்துள்ளன. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கவில்லை. ஆகவே, முறையான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்’’ என்று வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
அன்று இந்த வாதத்தினை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 2020ல் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், உரிய இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றி அமைக்கப்பட்ட புதிய பட்டியலை நான்கு வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று இன்று உத்தரவிட்டுள்ளார்.