அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்கவைச் சேர்ந்த Hindenburg Research, இந்தியாவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது
அதானி குழுமம் பண மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“அதானி நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற அதானி குழுமத்தின் நிர்வாகத்திற்கு இருக்கும் நம்பிக்கைக்குக் காரணம் மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்” என்றும் Hindenburg Research தெரிவித்துள்ளது.
“எங்கள் கணிப்புக்கு ஏற்றப்படி மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் வினோத் அதானி பயன்படுத்திய அதே மர்மமான பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன கட்டமைப்புகளில் பங்கு வைத்திருந்தனர் என்பது எங்களுக்கு முன்பு தெரியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளது.
மாதபி புச்சு மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் கடந்த 2015 ஜூன் 5 அன்று சிங்கப்பூரில் உள்ள IPE Plus Fund 1-ல் தங்கள் கணக்கைத் திறந்திருக்கிறார்கள் என்பது Whistleblower-ன் ரகசிய ஆவணங்கள் கூறுகிறது.
“அந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை முதலீடு செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்றும் IIFL-ல் ஒரு முக்கிய அதிகாரி கையெழுத்திட்டு உள்ளதாக அந்த Whistleblower ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது” என்றும் Hindenburg தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, India Infoline நிறுவனம் மூலம் இந்த IPE Plus Fund என்ற பண்ட்-ஐ தொடங்கியுள்ளார். வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனமான India Infoline நிறுவனம் வயர் கார்டு ஊழலுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது என Hindenburg தெரிவித்துள்ளது.
வினோத் அதானி, அதானி குழுமத்திற்கு அதிக விலையில் மின் சாதனங்களை விற்பது மூலம் பணத்தை திருடி, அதனை இந்த IPE Plus Fund-ல் முதலீடு செய்து, அதன் வாயிலாக அதானி பங்குகளில் முதலீடு செய்து மறைமுகமாக அதானி பங்குகளின் விலை உயர்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்திற்கு எதிராக Hindenburg தனது முதல் அறிக்கையை வெளியிட்டு 18 மாதங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக ஜனவரி, 2023-ல் வெளியான அந்த அறிக்கையால் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பி இருந்தது.
பங்குச் சந்தையில் திருட்டு வேலை செய்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமத்தின் மீது Hindenburg குற்றம்சாட்டியது.
துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம், Hindenburg-ன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நிறுவன கணக்குகளில் பங்கு வைத்துள்ளவர்கள் அதானி குழுமத்துடன் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய முடியவில்லை என உச்சநீதிமன்ற விசாரணையின் பொது SEBI கூறியிருந்தது.
13 வெளிநாட்டு நிறுவன கணக்குகளில் பொருளாதார ஆர்வமுள்ள பங்குதாரர்களை கண்டறியும் முயற்சியை SEBI திடீரென நிறுத்தியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.