பங்குச் சந்தை தொடர்பான மோசடிகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை உண்டாக்குவதும், அதன் காரணமாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டு, பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. இதன் பின்னணியிலான அரசியலால், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ள மக்களின் பணத்தின் மீதான அதிகாரத்தின் விளையாட்டு குறித்த கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. அதானி நிறுவனத்தின் சார்பில் வெளிநாடுகளிலிருந்து நடைபெறும் ஷெல் கம்பெனிகளின் பங்கு வர்த்தகம் தொடர்பான சந்தேகங்களை அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது. ஷெல் கம்பெனிகளின் மோசடியான செயல்பாடுகளால், பங்குகள் விலை போலியாக உயர்த்தப்பட்டு, பங்குச் சந்தையில் மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் அந்த அறிக்கையின் அடிப்படை.
இது குறித்து, இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’ விசாரணை செய்யும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான், செபியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மதாபி புச் அம்மையாரும் அவரது கணவரும் அதானி குழுமத்தின் நிதி முறைகேளிடுகளில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பெரியளவில் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே வெளியான மோசடிகள் குறித்து செபி அமைப்பு முறையான விசாரணை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ முன் வரவில்லை என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதானி நிறுவனத்தின் சார்பிலும், செமி அமைப்பின் தலைவர் மதாபி புச் தரப்பிலும் இந்த அறிக்கையில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள், சட்டரீதியான நியாயத்தை முன்வைக்க முயற்சிப்பதாக இருக்கிறதேயன்றி, அதானி குழுமத்துடன் செபி தலைவருக்கும் அவர் கணவருக்கும் உள்ள தொடர்புகள் மறுக்கப்படவில்லை. அந்தக் குழுமத்தின் அங்கமாக கணவனும் மனைவியும் இருந்திருப்பது தெரியவருகிறது. இந்த நிலையில், அதானி குழுமத்தின் நிதி மோசடிகள் தொடர்பாக எப்படி நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எதிர்க்கட்சிகளிடமிருந்து மட்டுமல்ல, பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள பொதுமக்களிடமிருந்தும் வெளிப்படுகிறது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகே, நடுத்தர மக்கள் பங்குச் சந்தை உள்ளிட்ட நிதி சார்ந்த முதலீடுகளில் பெருமளவு கவனம் செலுத்தத் தொடங்கினர். தங்களால் தனிப்பட்ட அளவில் பெரிய நிறுவனங்களைத் தொடங்க முடியாதவர்களும், பெரியளவில் உற்பத்தி செய்ய முடியாதவர்களும், தங்களின் சேமிப்புத் தொகை அல்லது கையிருப்பில் உள்ளவற்றை, உற்பத்தி அல்லது சேவை சார்ந்த பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, உரிய நேரத்தில் வாங்குவது விற்பது போன்ற வர்த்தகத்தைக் கவனிக்கத் தொடங்கினார். இது இலாப-நட்டக் கணக்கைக் கடந்து, இந்திய வணிகத்தில் பணப்புழக்கத்தையும் பண சுழற்சியையும் பெருக்கியது. நடுத்தர மக்களுக்கு பிற சேமிப்புகளைக் காட்டிலும் இது வசதியாகவும் அமைந்தது. பங்குச் சந்தை வளரத் தொடங்கியபோதே அதன் மோசடிகளும் அம்பலமாகின. பங்கு வர்த்தகர் ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் வெளிப்பட்டதுடன், பிரதமர் அலுவலகம் வரை ஹர்ஷத் மேத்தாவுக்கு இருந்த தொடர்புகளையும் வெளிக்கொண்டு வந்தன. அதன்பிறகே, பங்கு வர்த்தகத்துறையில் கண்காணிப்புகள் அதிகமாகி, மக்களின் பணத்திற்கானப் பாதுகாப்பான வணிகம் என்ற நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டன.
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்கள் மட்டுமின்றி, பங்கு வர்த்தகம் தொடர்பான வழிகாட்டும் நிறுவனங்களை நடத்துபவர்களும், அதில் பணியாற்றுகின்ற இலட்சக்கணக்கான இளைஞர்களும் தொழில்-வேலைவாயப்புகளைப் பெறக்கூடிய அளவிற்கு இதற்கான சந்தை வளர்ச்சியடைந்துள்ளது. அந்த வளர்ச்சியை ஆட்சியதிகாரத்தில் உள்ள நெருக்கத்தின் காரணமாகத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு மோசடி செய்யும் நிறுவனங்களும் நீடித்திருக்கின்றன. அதானி நிறுவனம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கையின் உண்மைத்தன்மை எந்த விசாரணையின் மூலம் நிரூபிக்கப்படப் போகிறது என்ற கேள்விக்கு விடையில்லை. காரணம், கடந்த சில ஆண்டுகளில் நிதி தொடர்பான மோசடிகள் பல நடந்தும், அவை தொடர்பான நியாயத்திற்கு ஆட்சியாளர்கள் எந்த முனைப்பையும் காட்டவில்லை என்பதுதான்.
தேசிய பங்குச்சந்தையில் 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணன் தனது பணிக்காலத்தில் பல மோசடிகளில் ஈடுபட்டதும், இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனைப்படி செயல்பட்டு, அவருக்கு பங்குச் சந்தை தொடர்பான ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டதையும் விசாரணைகள் அம்பலப்படுத்தின. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சாரின் முறைகேடுகள், வங்கிகளில் நூற்றுக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டுத் தப்பி ஓடி உல்லாசமாக வாழும் விஜய மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் என ஏழை-நடுத்தர மக்களின் சேமிப்புப் பணத்தை சுரண்டிய கார்ப்பரேட் கிரிமினல்கள் மீது எந்த நடவடிக்கையையும் முழுமையாகவோ திறமையாகவோ இந்திய அரசாங்கம் எடுக்கவில்லை. இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் தங்களை ஆட்சியாளர்களின் கூட்டாளிகளாக வெளிப்படுத்திக் கொண்டு, மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.