62% புதிய சைனிக் ராணுவப் பள்ளிகளை சங்பரிவார், பாஜக நிர்வாகிகள் மற்றும் பிற இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு ஒன்றிய அரசு ஒப்படைத்துள்ளதாக, The Reporters Collective செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேரத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1961-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சுமார் 33 சைனிக் பள்ளிகள் கட்டப்பட்டு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்தசூழலில், கடந்த 2021-ல் புதிய கொள்கையை உருவாக்கிய ஒன்றிய அரசு, தனியார் பங்களிப்போடு நாடு முழுவதும் மேலும் 100 புதிய சைனிக் ராணுவப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 40 தனியார் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதில் சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்வ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என தற்போது தெரியவந்துள்ளது.
40 புதிய சைனிக் பள்ளிகளில், 10 பள்ளிகள் பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமானவை என்றும் 8 பள்ளிகளை RSS நிர்வாகிகளும், 6 பள்ளிகளை பிற இந்து அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக The Reporters Collective செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்தவம், முஸ்லீம் உள்ளிட்ட இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் புதிய கொள்கை மாற்றங்களால் சைனிக் ராணுவப் பள்ளிகளை நடத்தும் உரிமம் கருத்தியல் ரீதியாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது பல்வேறு கவலைகளை எழுப்புவதாக The Reporters Collective கூறியுள்ளது.