திரைப்படம் எனும் காட்சி ஊடகம் பொதுமக்களை வெகுவாகக் கவரக் கூடியது. வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்கும் சூழல் இல்லாதவர்களுக்குக் கூட, ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்றவர்களை திரையில்பார்த்து வரலாற்றைத் தெரிந்துகொள்வது வழக்கமாக உள்ளது.
வரலாற்றை அப்படியே காட்டுபவை ஆவணப்படங்கள். வரலாற்றுக் கதாபாத்திரங்களில் நடிக்கின்ற நடிகர்களின் தன்மைக்கேற்ப காட்சிகளை அமைப்பவை வழக்கமான திரைப்படங்கள். ராஜராஜ சோழன், ராஜா தேசிங்கு, வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி சம்யுக்தா போன்ற பழைய தமிழ்ப் படங்களில் நாயகன்-நாயகிக்கான காதல் காட்சிகள் உள்பட இப்படி சில பகுதிகள் இருக்கும். எனினும், வரலாற்றின் அடிப்படைத்தன்மை கெட்டுப்போகாமலும் விட்டுப்போகாமலும் திரைக்கதை அமைக்கப்படும் படங்களே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.
ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தின் வெளியான காந்தி திரைப்படம் பல ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற படம். அது வெளியான போது, காந்தியுடன் தொடர்புடைய தலைவர்கள் சிலரின் காட்சிகள் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து, தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே பாம்புகளைப் பிடித்து உள்ளே விட்ட விபரீதங்கள் நடைபெற்றன. ஒரு சில வரலாற்றுப் படங்களில் உள்ள காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் போடப்பட்டதாலும், தணிக்கைத் துறையின் அனுமதி மறுப்பாலும் வெளிவராமல் போன படங்களும் உண்டு. குற்றப்பத்திரிகை என்கிற திரைப்படம் அப்படியொரு பாதிப்புக்குள்ளானது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படம் பல ஆண்டுகளாக வெளியாக முடியவில்லை.
பார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவரும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ‘தேசிய தலைவர்’ என்ற படத்தைத் திரையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைத் தடை செய்ய வேண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும் காமராஜருக்குமான அரசியல் உறவு குறித்த காட்சிகளில், எவ்வித வரலாற்று ஆதாரங்களோ ஆவணங்களோ இன்றி, வெறும் செவி வழிச் செய்திகளின் அடிப்படையில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்றும், இந்தக் காட்சிகளுடன் படம் வெளியானால், இரு சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டு, தென்மாவட்டங்களின் அமைதி கெட்டுப்போகும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நடைபெறும் வாதங்கள், தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து நீதிமன்றத்தின் உத்தரவு அமையக்கூடும்.
வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும்போது இத்தகைய சிக்கல்களின்றி கவனித்துக் கொள்வது மிக முக்கியமானதாகும். பொன்னியின் செல்வன் என்ற சோழர்களின் வரலாற்றுப் பின்னணி கொண்ட படம் வெளியானது. அது முழு வரலாறு அல்ல. பிரபல எழுத்தாளர் கல்கி தன் அற்புதமான கற்பனைகளில் வரலாற்றைத் தூவி, சிறப்பாக எழுதிய நாவல். படிப்பதற்கு ரசனையான அந்த நாவல்தான் படமாக்கப்பட்டது. ராஜராஜசோழன் காலத்தின் முழு வரலாறு நம்மிடம் கிடையாது. ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், அதற்குப் பிறகான தலைவர்கள், நடப்பு அரசியல் குறித்த செய்திகளும் அதற்கான ஆதாரங்களும் முழுமையாக உள்ளன. அவற்றை அறியாமல் அரசியல் காரணங்களுக்காக அவதூறுகளைப் பேசும் போக்கு என்பது மேடையில் ஏறி சவடால் அடிப்பதற்கும், அதைக் கேட்டு அவரவர் கட்சிக்காரர்கள் கைத்தட்டுவதற்கும் நன்றாக இருக்கலாம். ஆனால், அது உண்மையாகிவிடாது.
நடிகர் விஜய் தலைவராக உள்ள த.வெ.க.வின் சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் அநாவசியமாகவும் அரசியல் காழ்ப்புணர்வுடனும், 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, இன்றைய முதலமைச்சர் ஓடி ஒளிந்துகொண்டார் என்று பேசினார். அது குறித்த விவாதங்களும் நடைபெற்றன. அன்றைய நாளில் இன்றைய முதலமைச்சர் ஓடி ஒளியவில்லை என்பதும், நள்ளிரவில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட நிலையில், வெளியூரில் இருந்த இன்றயை முதலமைச்சர் பொழுது விடிந்து, நண்பகலுக்குள் நீதிபதி முன் அவரே ஆஜராகி வழக்கை எதிர்கொண்டார் என்பதும், காழ்ப்புணர்வால் தொடரப்பட்ட அந்த வழக்கை அதன்பிறகு அ.தி.மு.க. அரசே நடத்தவில்லை என்பதும் ஆதாரங்களுடன் வெளிப்பட்டுள்ளன.
கண் இமைக்கும் நேரத்தில் வரலாற்றை மாற்றி எழுதிவிடலாம் என்பது வலதுசாரிகள் தொடங்கி, புதிய கட்சிகள் வரையிலான முயற்சியாக இருக்கிறது. அற்பத்தனமான செயல்களால் வரலாற்றை அத்தனை எளிதாக மாற்ற முடியாது. அற்பமான அரசியல் செய்பவர்களைத்தான் வரலாறு தூக்கி எறிந்திருக்கிறது.
