கேரளாவில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகினையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்திய ‘பா’நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில் அரங்கேறியது அந்த சம்பவம். படப்பிடிப்பு முடிந்து இரவில் கொச்சியில் இருந்து திருச்சூருக்கு காரில் வீடு திரும்பிய அந்த பிரபல ’பா’ நடிகை டிரைவர் உதவியுடன் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் தப்பித்து வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசில் புகார் மூலம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகையின் புகாரை அடுத்து அவருக்கு டிரைவராக இருந்த பல்சர் சுனில்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பகீர் தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள நடிக திலீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி நடந்த நடிகை கடத்தல் வழக்கு விசாரணை 2018ம் ஆண்டு முதல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஏழு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் கூட விசாரணை நீண்டுகொண்டேதான் சென்றது. சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பல்சர் சுனில்குமார் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜாமீனில் வந்தார். இந்நிலையில் 26.9.2024ல் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கியது. இதனால் இன்னும் 2 மாதங்களில் இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் அப்போது தகவல் வெளியானது. 26.9.2024 அன்று நடந்த விசாரணயில் திலீப், பல்சர் சுனில்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மூடப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் 251 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். குற்றம்சாட்டப்பட்டோரில் ஏ1 முதல் ஏ6 வரை மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் மற்றும் நடிகையின் கார் டிரைவர் பல்சர் சுனில் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்றும், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர் மீதான குற்றச்சாட்டில் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சரத் என்பவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளார்கள் என்று திலீர் வாதாடி வந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம்.
விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் திலீப், தன் திரை வாழ்வை அழிக்க முயற்சி நடந்ததாக தெரிவித்திருக்கிறார்.
