
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவராக இருப்பவர்தான் போப். தற்போது போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதற்கு முன்னர் போப்பாக இருந்த 16-வது பெனடிக்ட் உடல்நிலை காரணமாக 2013ம் ஆண்டு போப் பதிவிலிருந்து விலகினார். பொதுவாக போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி விலகுவதில்லை. இதற்கு முன்னதாக 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரி பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
பெனடிக்ட் பதவியில் இருந்து விலகியதும் புதிய போப்பாக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 266வது பேப் ஆவார். சுமார் 12 ஆண்டுகள் போப்பாக பதவி வகித்த இவர் சில மாதங்களாக உடல்நிலை பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலிருந்து சற்று நலம் பெற்றுத் திரும்பிய அவர், வாடிகனில் நடந்த ஈஸ்டர் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு அவர் காலமாகியதாக வாடிகன் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜார்ஜ் மரியோ பெர்க்கலியோ என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1936, டிசம்பர் மாதம் அர்ஜெண்டினாவில் பியுனோஸ் அயனஸ் நகரில் பிறந்துள்ளார். போப்பாக பதவி ஏற்பவர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையில் ‘பிரான்சிஸ்’ என மாற்றிக் கொண்டார்.
புதிய போப் தேர்ந்தெடுக்கும் முறை:
இவர் காலமான நிலையில் அடுத்த போப் யார்? அவரை எப்படி, யார் தேர்வு செய்வார்கள் என்கிற கேள்விகளும் சந்தேகங்களும் எழத் தொடங்கியுள்ளது.
போப் இறந்தது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், துக்க நாட்கள் அனுசரிக்கப்படும். இது ‘இருக்கை காலியாகி உள்ளது’ என அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் புதிய போப்பினை தேர்ந்தெடுப்பதற்காக கார்டினல்கள் கூடி ஒரு கூட்டத்தை நடத்தி வாக்கெடுப்பை நடத்துவர். சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும் இந்த ரகசிய வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 253 கார்டினல்களில் 80 வயதுக்குள் உள்ள கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். கார்டினல் எனப்படுபவர்கள் போப்பின் நெருங்கிய ஆலோசகர்களான இருக்கக்கூடியவர்கள்.

இந்த இரகசிய வாக்கெடுப்பின் போது வெளியில் இருப்பவர்களுடனான இணைப்பைத் துண்டிக்கும் வகையில் தொலைப்பேசி, இணையம் போன்ற வசதிகள் சிஸ்டைன் சேப்பலில் துண்டிக்கப்படும். ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். பல்வேறு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் வாக்குச் சீட்டுகள் நெருப்பில் எரிக்கப்படும். போப் தேர்ந்தெடுக்கப்பட்டது மக்களுக்குப் புகையின் நிறத்தைக் கொண்டு அறிவிக்கப்படும்.
அதாவது கருப்பு நிற புகை வெளியேறினால் போப் தேர்வாகவில்லை என்று அர்த்தம். இதுவே வெள்ளை நிற புகை வெளியேறினால் போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகப் பொருள்.
போப் தேர்வானதும் புதிய பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பிறகு, மூத்த கார்டினல் ஒருவர் போப் தேர்வானதை ‘We have a pope’ என மக்கள் மத்தியில் அறிவிப்பார். அதனைத் தொடர்ந்து செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மேல்மாடத்தில் இருந்து தனது முதல் ஆசீர்வாதத்தை புதிய போப் வழங்குவார்.
புதிய போப் பட்டியலில் 8 பேர் முன்னணி:
புதிய போப் தேர்வில் பியட்ரோ பரோலின், பிரிடோலின் அம்போங்கோ பெசுங்கு, விம் எய்க், பீட்டர் எர்போ, லூயிஸ் அன்டோனியோ டாக்லே, ரேமண்ட் பர்க், மரியோ கிரேச் மற்றும் மேட்டியோ ஜூப்பி ஆகிய 8 பேர் முன்னணியில் உள்ளனர்.
போப் தேர்வு முடிவுற்று இன்னும் சில தினங்களில் புதிய போப் யார் என்பது முறையாக அறிவிக்கப்படும்.