ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு 9.30 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
இரண்டு நாள் பயணமாக அமித்ஷா தமிழகம் வந்தபோது அவரை நேரில் சந்தித்து பேசவில்லை பழனிசாமி. தொலைபேசியில் பேசியதாக தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்று இரவில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இது குறித்து இன்று டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார் பழனிசாமி.

சசிகலா வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வீர்களா?
இது குறித்து பலமுறை சொல்லிவிட்டேன். மீண்டும் மீண்டும் அதைக் கிளற வேண்டாம்.
ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?
வாய்ப்பில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். 50 முறைக்கு மேல் சொல்லிவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க வேண்டாம்.
விலக்கப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டால் அதிமுக வலிமையான கட்சியாக மாறுமே?
இப்பவே அதிமுக வலிமையான கட்சியாகத்தான் இருக்கிறது.

ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்துக்கொள்ளச் சொல்லி பாஜக அழுத்தம் இருக்கிறதா?
முதன் முதலில் அமித்ஷாவோடு சோழா ஓட்டலில் கூட்டணி ஒப்பந்தம் செய்தபோதே அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொல்லிவிட்டார். அதை இப்போது வரையிலும் கடைபிடித்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் ஏன் இன்னும் தொகுதிப்பங்கீடு நடைபெறவில்லை?
மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் வர இருக்கின்றன. அந்தக் கட்சிகள் எல்லாம் வந்த பின்னர்தான் தொகுதிப்பங்கீடு நடைபெறும்.

எந்தெந்த கட்சிகள் வர இருக்கின்றன?
பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதை எல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது.
கூட்டணிக்கு தலைமை யார்? வென்றால் என்.டி.ஏ. தானே ஆட்சி அமைக்கும்?
அதிமுக தலைமையில்தான் கூட்டணி. வென்றால் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்.
அமித்ஷா பெரியவரா? எடப்பாடி பெரியவரா?
மக்கள்தான் பெரியவர்கள். எங்கள் கட்சிக்கு நான் பெரியவர். அவர்கள் கட்சிக்கு அவர்கள் பெரியவர்கள்.
