கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தவெக நடத்தும் கூட்டங்களுக்கு ரொம்பவே உன்னிப்பாக இருந்து கவனித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் வழங்கிய கெடுபிடிகள் குறித்து அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘’84 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 16ம் தேதி நடக்கவிருந்த கூட்டம் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

காவல்துறை விதித்த விதிமுறைகளில் சில விதிமுறைகளை வெளியே சொல்ல முடியாது. சொன்னால் அதற்காகக் கூட வழக்கு போட முடியும். ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. சிபிஐ இருக்கிறது என்று வழக்கு போடுவார்கள். அதனால் சொல்லவில்லை. ஆனால்… ’’என்று சொல்லிவிட்டு, ‘’சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்..வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்’’ என்று பாடினார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், விஜய்க்கு அழுத்தம் இருக்கிறதா? செங்கோட்டையன் இப்படி பாடுகிறாரே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’அவர் பாடிய பாட்டுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். தெரியாத விசயத்தை கற்பனையாக பேசுவது எனக்கு தெரியாது’’என்கிறார்.
