ஆட்சியை விமர்சித்தால் அதிலும் விவசாயிகளுக்கு செய்யும் அர்ப்பணிப்பு குறித்து விமர்சித்தால் நாக்கை வெட்டுவேன் என்று சட்டப்பேரவையில் வெகுண்டெழுந்திருக்கிறார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

தெலுங்கானா சட்டப்பேரவையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்தும் பாசனங்கள் குறித்தும் விவாதம் நடந்த போது, முதல்வர் ரேவந்த் ரெட்டி வெகுண்டெழுந்து பேசினார்.
‘’தெலுங்கானா மாநிலத்தின் மீது இம்மாநில விவசாயிகள் மீதும் எங்களுக்கு இருக்கும் அக்கறை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை தோலுரிப்போம்’’ என்று முன்னாள் முதல்வர் கேசிஆர் சொன்னதற்கு பதிலடி கொடுத்தார் ரேவந்த் ரெட்டி.

அவர், ‘’நீங்கள் எதைப்பற்றியும் விமர்சிக்கலாம். ஆனால் மாநிலத்தின் மீதும் மாநிலத்தின் விவசாயிகள் மீதும் நாங்கள் வைத்திருக்குக்ம் அர்ப்பணிப்பை விமர்சித்தால் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களின் நாக்கையும் வெட்டுவோம், நாக்கை வெட்ட தயங்க மாட்டேன்’’ என்றார். மேலும், ‘’கடந்த 10 வருடங்களாக நீங்கள் எதையுமே செய்யவில்லை. ஆனால், நாங்கள் தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?’’ என்று ஆத்திரப்பட்டார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் பேச்சு என்று கேசிஆரின் பி.ஆர்.எஸ். கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் பதிவு செய்து வருகின்றன.
