இன்றைய காலத்தில் நல்ல வேலை கிடைப்பது எளிதல்ல. பல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை குறைத்துள்ளன. ஆனால் இந்த சூழலிலும், ஐ.ஐ.டி. ஹைதராபாத் படிக்கும் ஒரு மாணவர் நெதர்லாந்தில் (Netherland) ரூ.2.50 கோடி ஆண்டு சம்பளத்தில் வேலை பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இந்த மாணவரின் பெயர் எட்வர்ட் நாதன் வர்கீஸ் (Edward Nathan Varghese). இவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். நெதர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்ட Optiver என்ற பெரிய நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராக வேலை செய்ய உள்ளார்.மேலும், வரும் ஜூலை மாதம் முதல் அவர் அங்கு பணியாற்றத் தொடங்குவார்.
எட்வர்ட் வர்கீஸ், அந்த நிறுவனத்தில் இரண்டு மாதங்கள் கோடை பயிற்சி செய்தார். அந்த பயிற்சியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால், நிறுவனம் அவருக்கு நேரடியாக நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கியது. இதனை PPO என்று அழைப்பார்கள். பயிற்சியில் இருந்து நேரடியாக வேலை கிடைப்பது என்பது பெரிய சாதனை.
அவர் கூறும்போது, “நான் ஒரே நிறுவனத்திற்குத்தான் நேர்காணலுக்கு சென்றேன். வேலை கிடைக்கும் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் பெற்றோரும் சந்தோஷப்பட்டார்கள்” என்றார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். பள்ளி படிப்பை பெங்களூருவில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்தே கணினி நிரலாக்கத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். போட்டி நிரலாக்கத்தில் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். இந்திய அளவில் சிறந்த 100 மாணவர்களில் ஒருவராக இருந்துள்ளார். ஐ.ஐ.டி.யின் நல்ல பாடத்திட்டமும், பல பாடங்களை கற்கும் வாய்ப்பும் அவருக்கு உதவியாக இருந்தது.
2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. ஹைதராபாத் (IIT Hyderabad) வரலாற்றில், இதுவரை கிடைத்த மிக உயர்ந்த சம்பளம் இதுதான். இதற்கு முன்பு அதிகபட்சமாக ரூ.1 கோடி சம்பளமே கிடைத்திருந்தது. இந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐ.ஐ.டி. ஹைதராபாத்தில் பல மாணவர்கள் நல்ல வேலைகளை பெற்றுள்ளனர். சராசரி சம்பளமும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் மாணவர்களை தேர்வு செய்துள்ளன.இந்த சம்பவம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக உள்ளது.
