
தான் உருவாக்கிய மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை கலவையான ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசையை கடந்த 8ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார் இளையராஜா.
இந்த சிம்பொனி அரங்கேற்றத்தினால் ஆசிய கண்டத்திலேயே சிம்பொனி எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இளையராஜா.
இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இளைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப்போவதாக சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாதான் தன்னை சிம்பொனி எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தினார். அவர் தந்த ஊக்கத்தில் சிம்பொனி இசையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டில் அரங்கேற்றம் செய்யப்போகிறேன் என்று கூறி இருந்தார் லிடியன்.

இது உண்மைதானா? என்ற சலசலப்பு இருந்து வரும் நிலையில், ’’என்னிடம் இசை கற்றுக்கொள்ளுவதற்காக வந்திருந்தார் லிடியன் நாதஸ்வரம். ஒருமுறை சிம்பொனி இசை கம்போஸ் செய்திருப்பதாக சொல்லி அவர் புரோகிராம் செய்திருந்த மியூசிக்கை ப்ளே பண்ணி காட்டினார்.
20 செகண்ட் போனதுமே, ‘என்ன..சினிமா பேக்ரவுண்ட் மியூசிக் மாதிரி பண்ணியிருக்கே. இது தப்பாச்சே. இது சிம்பொனியே இல்ல. முதல்ல சிம்பொனி என்றால் என்னவென்று தெரிஞ்சுகிட்டு, அதுக்கப்புறம் சிம்பொனி கம்போஸ் பண்ணு’ என்றுதான் சொல்லி அனுப்புனேன்’’என்று சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இளையராஜாவின் இந்த விளக்கத்தின் மூலம், சிம்பொனி இல்லாத ஒன்றை பொதுவெளியில் சிம்பொனி என்று சொல்லித்திரிந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார் என்று சிலரும், இதை பொதுவெளியிலும் கூறி லிடியனை சிறுமைப்படுத்துவது பெரிய மனிதனுக்கு அழகா? என்றும் சிலர் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
a639f6