
திரை பிரபலங்கள் யாரைப்பார்த்தாலும் மைக்கை நீட்டி இசை பெரிதா? மொழி பெரிதா?என்று கேட்கின்ற அளவுக்கு இந்த விவகாரம் நீண்டு கொண்டே போகிறது.

இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கேள்வியைக் கேட்டு, சில இடங்களில் இசை மேலானதாக இருக்கும். சில இடங்களில் மொழி மேலானதாக இருக்கும். ஆகவே, இசையும் மொழியும் ஒன்றுதான் என்று கவிஞர் வைரமுத்து சொல்லி இருந்தார்.
இசைதான் பெரிது என்கிற ரீதியில் இளையராஜா இருக்கிறார். அதற்கு பதிலடிதான் வைரமுத்துவின் இந்த பதில் என்ற பேச்சு எழுந்தது. உடனே வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். வைரமுத்துவை ஒருமையில் பேசி எச்சரித்தார் கங்கை அமரன். இதற்கு கண்டனங்கள் வலுத்தன.

இளையராஜா, வைரமுத்துவுக்கு ஆதரவாக பலரும் கருத்து சொல்லி களத்தை சூடாக்கி வந்தனர். அந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு பின்னர் பேசிய இளையராஜா, தான் அத்தனை நாளும் சிம்பொனியில் பிஸியாக இருந்ததாக சொன்னவர், யார் என்ன பேசுகிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பது என் வேலையல்ல என்று சொல்லிவிட்டார்.
ஆனாலும் இந்த விவகாரத்தை விடாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சினிமா பிரபலங்களிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படித்தான் இமயமலைக்கு புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்திடமும் இதுகுறித்து கேட்க, ‘’நோ கமெண்ட்ஸ்’’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர் கங்கை அமரன் போல் அல்லாமல் மிகவும் பெருந்தன்மையுடன், முதிர்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.
’’இசை பெரிதா? மொழி பெரிதா? என்று நான் சொல்ல மாட்டேன். மக்களுக்கு எது பிடிக்குதோ அதுதான் பெரிது. இதை நான் தான் சொல்லி தெரியவேண்டும் என்றில்லை. அதே மாதிரி இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பேனா? மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பேனா? என்று வரும்போது, இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுப்பேன்.

ஏன் என்றால், தமிழிசை என்று சொல்வதுதான் வழக்கம். தேவாரப்பாடல்கள் எல்லாம் தமிழ் இசை என்றுதான் சொல்வதுண்டு. இசையையும் மொழியையும் பிரித்து பார்த்தது கிடையாது. அதை பிரித்து பார்க்கும்போதுதான் பிரச்சனை. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்து இருப்பதுதான் பிரச்சனை. என்னைப் பொறுத்தவரைக்கும் மொழியும் இசையும் அதாவது தமிழும் இசையும் வேறு வேறு இல்லை. தமிழர்களும் இசையும் வேறல்ல. இசை உலகில் என் அப்பா எவரெஸ்ட் சிகரம்’’என்றார்.