
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கட்சிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக அன்புமணி 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் ராமதாஸ்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டிருந்தார். அன்புமணியோ இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார் ராமதாஸ்.
பா.ம.க.வின் உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டைகளில் இருந்த அன்புமணியின் புகைப்படத்தினை நீக்கம் செய்து அதிரடி காட்டி உள்ளார் ராமதாஸ்.
தைலாபுரம் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பாமகவின் உறுப்பினர் படிவம், அடையாள அட்டைகளில் அன்புமணியின் படம் நீக்கப்பட்டுள்ளது.

நேற்று தைலாபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்பது முடிவான நிலையில், அது அன்புமணி மீது எந்தமாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று கட்சியினரிடையே பரபரப்பு எழுந்த நிலையில், இது முதற்கட்ட நடவடிக்கை என்று அக்கட்சியினர் கூறி வந்தனர். அடுத்தக்கட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அன்புமணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு வட்டாரம்.

அன்புமணி மீது என்ன நடவடிக்கை பாயப்போகிறது? என்ற பரபரப்புடன் இன்றைக்கு தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. 22 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கடந்த 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், இது வரையிலும் அன்புமணி பதிலளிக்காததால் அந்த கெடுவை நீடித்திருக்கிறது பாமக நிர்வாகக்குழு. வரும் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அன்புமணிக்கு எதிரான ராமதாசின் இந்த நடவடிக்கையால் பா.ம.க. வட்டாரம் திகுதிகுவென்றிருக்கிறது.