
இந்தியாவில் சமத்துவத்திற்கு எதிரான முதல் தடை, சாதிகள். பிறப்பினாலேயே ஒருவர் இந்த சாதியைச் சேர்ந்தவர் என்று விதிக்கப்படுவதாலும், அந்த சாதி இந்திய சமூகத்தில் எந்தப் படிநிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தும் அவரவருக்குரிய சமூக அந்தஸ்து கிடைக்கிறது. பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் அந்தஸ்து பெறக்கூடிய சாதியினரும், ஒவ்வொரு கட்டத்திலும் போராடி சமூக அந்தஸ்தைப் பெறக்கூடிய சாதியினரும் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் இரண்டாவது வகையினரின் எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம்.
ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சாதி ஏற்றத்தாழ்வுகள் இப்போது அப்படியே இல்லாவிட்டாலும், ஏற்ற இறக்கமின்றி எல்லா நிலைகளிலும் சமத்துவம் நிலவுகிறது என்று சொல்ல முடியாது. தேர்தல் வாக்கு அரசியலில் சாதி அந்தஸ்தைவிட சாதியினரின் எண்ணிக்கை முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைகிறது. இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால்தான், வகுப்புரிவாரி இடஒதுக்கீடு தொடங்கி இன்றைய 69% இடஒதுக்கீடு வரை தமிழ்நாட்டில் அனைத்து சாதியினருக்குமான வாய்ப்புகளை வழங்கும் சமூக நீதிக் கொள்கை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் கருவறை வரை இந்த சமத்துவத்தை நோக்கிய பயணத்தை தமிழ்நாடு மேற்கொண்டு, இந்தியாவில் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆனாலும், இது முழுமையான அளவில் நிறைவேறிவிட்டது என்று சொல்ல முடியாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்கிறோம். அந்த சட்டத்தை நிலைநிறுத்தும் வலிமை நீதியின் கைகளில் உள்ளது. யார் எந்த சாதியாக இருந்தாலும், எந்த மதம், மொழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நீதி என்பது நியாயமான ஒன்றாகவே வெளிப்பட வேண்டும். அத்தகைய நீதியை வழங்கக்கூடிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளனர். அவர்களுக்கு மேலாக, இந்தியாவின் உச்சநீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றங்களில் சமூக நீதி என்பது எந்தளவில் உள்ளது?
ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் எம்.பி. மனோஜ்குமார் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி முக்கியமானது. இந்திய நீதிமன்றங்களில் எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எந்தளவில் உள்ளனர் என்ற அவருடைய கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்குமார் மெக்வால் அளித்த பதில், இந்தியாவின் நீதிபரிபாலன அமைப்பு பற்றிய நிலையைத் தெளிவாக்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள 715 நீதிபதிகளில் 551 பேர் உயர்சாதியினராக இருக்கிறார்கள் என்பதுதான் அமைச்சர் அளித்துள்ள பதில். அதாவது, 77% நீதிபதிகள் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள். 22 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் (3%). 16 நீதிபதிகள் பழங்குடி வகுப்பினர்(2%). 89 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(12%). சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் 37 பேர்(5%). உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் சமூக நீதி எப்படி இருக்கிறது என்பதை மத்திய சட்டத்துறை அமைச்சர் அளித்த பதிலில் உள்ள விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் 1970களிலேயே பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பரிந்துரைத்து அமர்த்தியது திராவிடக் கட்சிகளின் ஆட்சி. ஆனாலும், 50 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தமிழ்நாடு உள்பட இந்திய அளவிலான உயர்நீதிமன்றங்களில் சமூக நீதி அளவுகோலும், சமத்துவமான வாய்ப்பும் அமையவில்லை என்பதையே சட்டத்துறை அமைச்சரின் பதில் எடுத்துக்காட்டுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளைப் போல நீதித்துறையில் இடஒதுக்கீட்டு முறை கிடையாது. இது குறித்து பல விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கங்கள் தொடங்கி சமூக நீதி அமைப்புகள் பலவும் வலியுறுத்துகின்றன. இந்திய அளவிலும் அது அவ்வப்போது எதிரொலிக்கிறது. ஆனால், அதனை முன்னெடுத்து செயல்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசாங்கத்திடம் இல்லை.
உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் என்ற அமைப்புதான் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. இந்த கொலீஜியம் அமைப்பு முறை குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், மாற்றங்கள் குறித்துப் பேசப்பட்டாலும் முழுமையான முன்னெடுப்புகள் தாமதமாகும் நிலையில், நீதித்துறையில் பல சமூகங்களுக்கும் சமவாய்ப்பு என்ற நிலை எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறது.
தகுதிப் படைத்தவர்களே நீதிபதியாக முடியும். அந்தத் தகுதி என்பது குறிப்பிட்ட சாதிகளுக்கேயுரிய தகுதியாக இருக்கமுடியாது. பல சாதிகளிலும் உள்ள தகுதியானவர்கள் நீதிபரிபாலனம் செய்யும் வாய்ப்பு உருவாகவேண்டும். அதில் பெண்களுக்குரிய பங்கும் அளிக்கப்பட்டு பாலின சமத்துவம் நிலைநாட்டப்படவேண்டும்.
கொலீஜியம் இருக்கும் வரை இது இப்படியே தொடரும். தன்னைத்தானேயும் தனக்குப்பின் யார் என்பதையும் தானே நிர்ணயம் செய்யும் முறையே கொலீஜியம். மக்களாட்சிக்கு எதிரானது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இந்த முறை இல்லை.
6e46ja