
போப் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் அமெரிக்க அதிபரும் உக்ரைன் அதிபரும் இரண்டு நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்து கொண்டு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல்கள் குறித்து உரையாடினார்கள். ஏறத்தாழ 3 ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் ஓயவில்லை. இருதரப்பிலும் ராணுவத்தினர் பலர் பலியாகியிருக்கிறார்கள். குண்டு வீச்சில் உக்ரைன் நாட்டின் பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டு பொதுமக்கள் பலியாகியிருக்கிறார்கள். ரஷ்யாவின் போர் வெறியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் உக்ரைனுக்கு உள்ள ஒரே வழி, அமெரிக்காவின் தயவை நாடுவதுதான்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் காசா பகுதியிலும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் வெறும் நிலம் சம்பந்தப்பட்ட உரிமை மட்டுமன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் மத உணர்ச்சிகளும் அதில் அடக்கம். ஒரு காலத்தில் இந்திய அரசு பாலஸ்தீனத்தின் பக்கம் நின்று ஆதரவைத் தெரிவித்தது. தற்போது இந்தியாவின் நேச நாடாக இருப்பது இஸ்ரேல்தான். காரணம், இந்தியாவை ஆட்சி செய்பவர்களின் மதவாத அரசியல்தான்.
இலங்கையில் இப்போது பொருளாதார பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம், ஏறத்தாழ 30 ஆண்டுகள் அந்த மண்ணில் நீடித்த இனப் போர்தான். இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்தர்கள் பக்கம் நின்று தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உரிமையிழந்தவர்களாக ஆக்கியது. தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை ஆகியவை பறிக்கப்பட்டன. தமிழ் மக்கள் இரண்டாந்தர குடிமக்களாகினர். அவர்களின் ஜனநாயகக் குரல் நசுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். சிங்கள ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் நீடித்த சண்டையின் முடிவில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு இலட்சக்கணக்கானத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதம் ஏந்திய போராளிகளும் மரணமடைந்தனர்.
முப்பதாண்டுகள் நீடித்த போரினால் தமிழர்கள் அழிக்கப்பட்டதுடன், சிங்களர்கள் வாழும் பகுதிகளிலும் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டன. போரில் வெற்றி பெற்ற போது ஹீரோவாகக் கருதப்பட்ட ஆட்சியாளர்கள், குடும்பத்துடன் விரட்டப்பட்ட சூழலையும் அதே இலங்கையில் பார்க்க முடிந்தது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு பழைய நிலைமைக்குத் திரும்புவதென்பது ஆள்பவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் அவ்வப்போது மோதவேண்டிய சூழலில் உள்ளது. இந்தியா மீது சீனா படையெடுத்தபோது பெரும் பாதிப்பை நம் நாடு எதிர்கொள்ள நேர்ந்தது. அண்மைக்காலத்தில்கூட இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா உரிமை கொண்டாடுவதும், அங்கு ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டிருப்பதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையையையே காட்டுகிறது. மற்றொரு நாடான பாகிஸ்தான், பல முறை இந்தியாவுடன் மோதி தோல்வியடைந்ததுடன், தனது நாட்டின் ஒரு பகுதியான கிழக்கு வங்காளத்தையும் இழந்துவிட்டது. அந்த கிழக்கு வங்காளம்தான் இன்று பங்களாதேஷ் என்ற தனி நாடாக உள்ளது. கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படையினர் ஊடுருவி வந்தபோதும் இந்தியா அதனை முறியடித்தது.
இத்தனைக்குப் பிறகும், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவியபடியே உள்ளனர். அண்மையில், காஷ்மீருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகளவில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ராணுவமும் ராணுவமும் மோதும் யுத்தங்கள் உண்டு. ராணுவமும் போராளிக் குழுக்களும் மோதுவது உண்டு. எந்த வித ஆயுதமும் இல்லாத சுற்றுலாப் பயணிகளுடன் மோதியவர்கள் மனிதப்பிறவிகள்தானா என்ற சந்தேகம் எழக்கூடிய அளவிற்கு, தீவிரவாத போதனையும் பயிற்சியும் அவர்களின் கண்களை மறைத்துள்ளது. அதனால்தான் அப்பாவிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவில்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று இந்தியா தெளிவாகக் கருதுவதால் அந்நாட்டிற்கான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் என்பதுதான் தற்போதைய நிலைமை.
இந்தியாவில் பாகிஸ்தானியர்கள் பலர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களையும் உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டிருப்பதால் கைக்குழந்தைகள், முதியோர் ஆகியோரும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்திய மணமகனை திருமணம் செய்துகொண்டு 15 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த பாகிஸ்தான் பெண் வெளியேற்றப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். தனது நாட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து அங்கே போய் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறார் அந்தப் பெண்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி விருதுகளும் பெற்றிருக்கும் வீரரின் தாய் பாகிஸ்தான் நாட்டவர் என்பதால் அவரையும் வெளியேற்ற வேண்டிய நிலையில் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
நாட்டைக் காக்கும் மகன். நாடற்ற நிலையில் தாய். மனித உறவுகளை சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதுதான் போர்களின் இறுதி விளைவு. இன்னொரு போர் விரைவில் நடந்தாலும் விளைவுகள் மாறப்போவதில்லை.
0ltma6