கடந்த ஜூலை மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே நடந்த இரு முக்கிய சந்திப்புகள், 31 சுற்று தூதரக சந்திப்புகள் மற்றும் 21 சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டோம் என்றும் இது 2020-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையே எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுத்துள்ளதாகவும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
குறிப்பாக சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பில் இருந்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் இதை ஒரு பெரிய முன்னேற்றமாக பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவின் கசான் நகரில் நாளை(அக்.22) நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் இருவரும் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2020 ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு எல்லையில் 7 இடங்களில் மோதல் போக்கு நிலவியது. அவற்றில் 5-ல் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட நிலையில், டெப்சாங் ப்ளைன்ஸ் (Depsang Plains) மற்றும் டெம்காக் (Demchock ) ஆகியவற்றில் தொடர் மோதல் நிலவியது.
இதனால், இந்திய மண்ணில் சீன படைகள் இருப்பதாகக் கூறி மத்திய பாஜக அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்கியதன் மூலம் இந்த விவகாரம் நாடு முழுவதும் முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் மாறியது.
ஜெய்சங்கர் – வாங் யீ சந்திப்புகள்
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கடந்த ஜூலை மாதம் இரண்டு முறை சந்தித்தபோது, பிரச்சனைக்கு தீர்வு காணும் செயல்முறையின் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜூலை 4 அன்று கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற SCO கூட்டமைப்பின் நிகழ்வில் முதல் சந்திப்பு நடந்தபோது, “எல்லைப் பகுதிகளில் தற்போதைய நிலைமை நீடிப்பது இருதரப்புக்கும் நல்லது இல்லை என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் கிழக்கு லடாக்கில் எஞ்சியிருக்கும் பகுதிகளிலிருந்து முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துறைத்தனர்” என்றும் கூறப்பட்டது.
தொடர்ந்து ஜூலை 24-ம் தேதி வியட்நாமில் நடந்த ASEAN மாநாட்டில் இரு அமைச்சர்களிடையே 2-வது சந்திப்பு நடைபெற்றது. அதன் முடிவில், விரைவில் தீர்வு காணும் நடவடிக்கையை எடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தியா-சீனா இடையேயான 31 சுற்று தூதரக பேச்சுக்கள் மற்றும் 21 சுற்றுகள் இந்தியா-சீனா கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான சந்திப்புகள் மூலம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த கூடுதல் விவரங்களை எதிர்க்கட்சிகள் இப்போது கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடனான உறவுகளை சரிசெய்வதற்காக பல மாதங்களாக சீனா வெளிப்படையாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. எல்லைப் பிரச்சனையை பொருளாதார உறவுகளிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவை சீனா பலமுறை வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.