ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சித் தோல்வியை அடைந்ததால், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தனது தேர்தல் வியூகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஹரியானாவில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிபெறும் என்கிற அனைத்து ஊடக கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
‘மக்களின் விருப்பங்களுக்கு புறம்பான இந்த தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது என்றும் இது ஜனநாயகத்தின் தோல்வி’ என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
“இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய பாடம், அதீத நம்பிக்கை என்றும் இருக்கக்கூடாது” என்று ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்த ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகத்தை பற்றியும் ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-UBT மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றன.
“அதிக நம்பிக்கையுடன்” இருக்கக் கூடாது என்பதுதான் இப்போது நடந்து முடிந்த ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் மிகப்பெரிய பாடம், என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஹரியானா மக்கள் பாஜகவை தோற்கடிக்க விரும்பினர் என்றும், காங்கிரஸின் தேர்தல் வியூகத்தில் உள்ள குறைபாடு காரணமாகவே தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிராவில் ஹரியானா தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சிவசேனா-UBT தலைவர் பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஹரியானாவில் பாஜகவுக்கு எதிரான நேரடிப் போராட்டத்தில் எதிர்பார்ப்புகளையும் மீறிய தோல்வியை சந்தித்துள்ளதால், காங்கிரஸ் தனது தேர்தல் வியூகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தீவிர சுயபரிசோதனை செய்து, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை அனைத்து இந்தியா கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிவசேனா-UBT மற்றும் சரத் பவார் தலைமையிலான NCP-SP கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.