இந்திய அரசின் முக்கிய அலுவலகங்களான “PMO” (பிரதமர் அலுவலகம்) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர் இந்தியா போன்ற வணிக நிறுவனங்களை சீன அரசுடன் தொடர்புடைய ஹேக்கர் குழு குறிவைத்தது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘இணையப் பாதுகாப்பு’ ஒப்பந்ததாரராக உள்ள iSoon நிறுவனத்திற்குத் தொடர்புடைய ஆயிரக்கணக்கான ஆவணங்கள், படங்கள் மற்றும் Chat-கள் GitHub தளத்தில் அடையாளம் தெரியாத கணக்கில் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டன.
Microsoft நிறுவனத்திற்கு சொந்தமான GitHub தளத்தில் கோப்புகள் எப்படி கசிந்தன என்பதை கண்டறிய iSoon மற்றும் சீன போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று Associated Press (AP) செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இரகசிய ஹேக்குகள், ஸ்பைவேர் செயல்பாடுகள் மற்றும் சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய சைபர் அச்சுறுத்தல்கள் தொடர்பான சிக்கலான வலையமைப்பை GitHub தளத்தில் கசிந்துள்ள ஆவணங்கள் கொண்டிருப்பதாக, India Today செய்தி நிறுவனத்தின் Open Source Intelligence குழு நடத்தியப் பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
சீன மொழியில் வெளியான அந்த ஆவணத்தில், ஹேக்கர்கள் தங்களின் செயல்பாடுகளையும், இலக்குகள் பற்றிய தகவல்களையும் பட்டியலிட்டுள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் NATO ராணுவ கூட்டைப்பு, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முதல் சீனாவின் நட்பு நாடான பாக்கிஸ்தான் உட்பட ஹேக்கர்களின் இலக்குகளாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹேக்கர்களின் பல்வேறு இலக்குகள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், திருடப்பட்ட தரவுகள் பற்றிய விவரங்கள் ஏதேனும் கண்டறிய முடியவில்லை என India Today இண்டெலிஜன்ஸ் குழு கூறியுள்ளது.
“இந்திய இலக்குகள்”
GitHub-ல் கசிந்த ஆவணங்களின் படி, நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் போன்ற இந்தியாவின் முக்கிய துறைகள் ஆவணத்தில் இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் அக்டோபர் வரை, இந்தியா-சீனா எல்லைப் பதற்றத்தின் உச்சக்கட்டத்தின் போது “உள்துறை அமைச்சகம்” தொடர்பான 5.49 GB தரவுகளை சீன ஹேக்கர் குழுக்கள் திருடியது தெரியவந்துள்ளது.
இந்திய அரசின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் பயனர் தரவுகளும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகளின் தினசரி Check-in விவரங்கள் தொடர்பான தரவுகளும் சீன ஹேக்கர் குழுக்கள் திருடியுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணித்து திரும்பும் பயணிகளின் ‘Entry and Exit’ விவரங்களையும் கசிந்த ஆவணங்களில் இலக்குகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியாவைத் தவிர, சீன ஹேக்கர் குழு தனது நெருங்கிய நட்புநாடான பாகிஸ்தானையும் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. நேபாளம், மியான்மர், மங்கோலியா, மலேசியா, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், தாய்லாந்து, கஜகஸ்தான், துருக்கியே, கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் சீன ஹேக்கர்கள் குழு குறிவைத்தது தெரிய வந்துள்ளது.
“Inputs from India Today”
Follow “Spark Media” Channel in WhatsApp