இந்திய பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டினர் சமூக ஊடகங்களில் சரச்சனையான கருத்துத் தெரிவித்ததால், இருநாட்டு உறவுகளும் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் திங்களன்று(08/01/2024), இந்தியாவின் மிகப்பெரிய பயண முன்பதிவு தள நிறுவனங்களில் ஒன்றான EaseMyTrip, மாலத்தீவுக்கான விமான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.
பிரச்சனையின் தொடக்கப் புள்ளி
இந்தியப் பிரதமர் மோடி, இந்தியாவின் லட்சத்தீவுக்குப் பயணம் மேற்கொண்டு வெள்ளை மணல் கடற்கரையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் படத்தைப் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
மாலத்தீவிலிருந்து வடக்கே 161 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லட்சத்தீவுகளின் இயற்கை அழகை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவுகளை மேற்கோள்காட்டி மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் ஏளனப்படுத்தி X தளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா, பிரதமர் மோடியின் பதிவு குறித்து “கோமாளி” என்று பதிவிட்டிருந்தார். மேலும், பிரதமர் மோடியை “இஸ்ரேலின் கைப்பாவை” என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளையும் கலாச்சாரத்தையும் மாலத்தீவு நாட்டு அதிகாரிகள் சிலர் அவமதிக்கும் வகையிலும் பதிவு செய்திருந்தனர்.
இந்தியாவில் இருந்து எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய அரசு அதிகாரிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரராகள் உட்பட பலர் சமூக ஊடகங்களில் மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராக பதிவுகள் செய்தும் இந்திய சுற்றுலாப் பயணிகள் லட்சத்தீவுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தினர்.
இந்திய பயண இணையதளமான EaseMyTrip மாலத்தீவுக்கான பயண முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்த இந்திய சுற்றுலாப் பயணிகள் பலர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இழிவான சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக இந்தியாவுக்கான மாலத்தீவு தூதரக உயர் அதிகாரி இப்ராகிம் சாஹீப்பிற்கு திங்களன்று(08/01/2024) இந்திய அரசு சம்மன் அனுப்பியது.
மாலத்தீவு அரசு நடவடிக்கை
இந்த விவகாரம் குறித்து பதிலளித்த மாலத்தீவு அரசாங்கம், இந்தியாவைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்த 3 மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப், மற்றும் அப்துல்லா மஹ்சூன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது.
“வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துகள் பதிவு செய்யப்பட்டது குறித்து மாலத்தீவு அரசாங்கம் அறிந்திருக்கிறது. இந்தக் கருத்துக்கள் முற்றிலும் தனிப்பட்டவையாகும் மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை”, என்று விவரித்து அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது.
இந்தியா-மாலத்தீவு உறவுகள்
இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் இடையே நெருங்கிய, சுமூகமான உறவுகளை பகிர்ந்துக் கொண்டு வந்துள்ளன. 1965-ல் மாலத்தீவு சுதந்திரம் அடைந்தப் பிறகு, இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடு இந்தியா.
இரு நாடுகளும் வலுவான பாதுகாப்பு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இருநாடுகளின் ராணுவங்களும் பயிற்ச்சி ஒத்திகைகளையும் மேற்கொண்டு வந்துள்ளன. மேலும், மாலத்தீவு நாட்டுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளையும் இந்தியா வழங்கி வந்தது.
இருப்பினும், 2022 முதல் தற்போதய அதிபர் முகமது முய்சு தலைமையிலான மாலத்தீவு முற்போக்குக் கட்சி, மாலத்தீவு தேசத்தில் நிறுத்தப்பத்திருந்த இந்திய இராணுவ வீரர்கள் மாலத்தீவின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி (India Out) பிரச்சாரம் செய்து இந்தாண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
அதிபர் முகமது முய்சு தலைமையிலான மாலத்தீவு முற்போக்குக் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன், அந்நாட்டில் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்கும் பணியில் இருந்த சுமார் 70 இந்திய வீரர்களை திரும்பப் பெறுமாறு கோரியது.
கடல்சார் பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 2022ல் மாலத்தீவு இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தை செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாகவும் ஜுன் 2024 முதல் மாலத்தீவு பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த ஆய்வு திட்டத்தை இந்திய கடற்படையிடம் இருந்து கையகப்படுத்திக் கொள்வார்கள் எனவும் அறிவித்தது.
சீன ஆதரவு நிலைபாட்டைக் கொண்டுள்ள தற்போதைய மாலத்தீவு அரசால், முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
Published by அசோக் முருகன்