இந்திய அளவில் தாலுக்காக்கள் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில் பருவமழைப் பொழிவு பெருமளவில் அதிகரித்து பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
4,500க்கும் மேற்பட்ட தாலுகாக்களின் 40 ஆண்டுகால மழைப் பொழிவு தரவுகளை (1982-2022) இந்தியாவைச் சேர்ந்த தனியார் அமைப்பான ‘எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW)’ ஆய்வு செய்தது.
விரிவான ஆய்வு முடிவில், இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு அதிகளவில் பெய்தது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் (2012-2022) இந்தியாவின் 55% தாலுகாக்களில் 10% உயர்வை கண்டுள்ளன.
குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், மத்திய மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களின் 25 சதவீத தாலுக்காக்களில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 30 சதவீதத்திறக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளன.
குறுகிய நேரத்தில், அதிக மழைப்பொழிவு ஏற்படுவதாகவும், இதனால் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு இந்தியா முழுவதும் சீராக பொழிவது இல்லை என்றும் மழை அளவு சில பகுதிகளில் குறைந்தும் சில பகுதிகளில் அதிகளவிலும் பதிவாவதாக, ஆய்வு கூறுகிறது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பருவமழை மாறுபாடு தீவிரமடைந்துள்ளது, அதன் தாக்கங்களை குறைக்க அனைத்து அரசு நிர்வாகங்களும் காலநிலை மாற்றம் குறித்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று CEEW அமைப்பின் ஆராய்ச்சியாளர் ஷ்ரவன் பிரபு, தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் இந்திய பருவமழைக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைத்து வலியுறுத்தியுள்ளார்.