
எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஏழாவது முறையாக பதிலடி கொடுத்திருக்கிறது இந்தியா.
1947ஆம் ஆண்டு தொடங்கி 2025 வரையிலும் ஏழு முறை இந்தியாவிடம் வாலாட்டி, ஒவ்வொரு முறையும் பதிலடி வாங்கி இருக்கிறது பாகிஸ்தான். இந்த முறை ஓங்கி அடித்திருக்கிறது இந்தியா.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை சுற்றி வளைத்து அதில் ஆண்களை மட்டும் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதக் கும்பல். இதற்கு பதிலடியாக இந்திய முப்படைகள் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடியில் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. 100 பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்பட்டு உள்ளனர்.
25 பெண்களின் குங்குமம் அழியக் காரணமாக இருந்த பஹல்காம் தாக்குதலை நினைவுகூரும் விதமாகவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்கப்பட்டு, இராணுவம் வெளியிட்ட இதற்கான லோகோவில் கிண்ணத்தில் இருந்து குங்குமம் சிதறிக் கிடந்தது. பஹல்காம் சம்பவம் நடந்த 16ஆம் நாளில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடந்துள்ளது என்பதால் இது பஹல்காம் தாக்குதலுக்கு நடந்த 16 ஆம் நாள் காரியம் என்கின்றனர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இதுதான் உண்மையான அஞ்சலி என்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடுகிறது. இந்திய ராணுவத்திற்கு ஆதரவுக்குரல்கள் நாடெங்கிலும் ஒலிக்கின்றன.

1962இல் இந்தியா – சீனா போரின்போது மாநிலங்களவையில் பேசிய பேரறிஞர் அண்ணா, ‘’நாட்டின் கவுரவத்தையும், சுதந்திரத்தையும், சுயாட்சியையும் காப்பாற்றுகின்ற பெரும் உன்னத இலட்சியத்திற்காக நாடே ஒன்று திரண்டு எழும்போது கோஷ்டி அரசியல் வேறுபாடுகள் மறைந்து போய்விடுகின்றன’’ என்று அப்போது பேசியது இப்போதும் பொருந்திப்போகிறது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் மல்லுக்கட்டு நிலை இருந்தாலும் நாடே இந்திய ராணுவத்திற்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய உள்துறையின் நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக நிற்பதாக உறுதி அளித்திருக்கின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடும் உறுதியாக நிற்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மதிமுக வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டிடிடிவி தினகரன், மநீம தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய், பாமக அன்புமணி ராமதாஸ், தமாகா ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும், ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட தமிழ்த் திரைப் பிரபலங்களும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தானே பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும். இப்போது பீகார் சட்டமன்றத் தேர்தல் நேரத்திலும் பயங்கரவாதிகள் அட்டாக் நடக்கிறதே என்ற விமர்சனங்களும் எழத்தான் செய்கின்றன.
மற்ற நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் விதத்திலும், பொது மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் எந்த சேதமும் விளைவிக்கக்கூடாது என்கிற இரக்கத்துடன் துல்லியமாக பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே அழிக்கும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்கிறது ஆபரேஷன் சிந்தூர். இது இராமயணத்தில் அசோக வனத்தை அழித்தபோது அனுமன் பின்பற்றிய சித்தாந்தம். அதைத்தான் ‘ஆபரேஷன் சிந்தூரும் பின்பற்றியது என்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பாகிஸ்தான் இராணுவத்தை தாக்காமல் அந்நாட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே இந்தியா குண்டு வீசி அழித்திருப்பதால், அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட அந்நாடுகளின் நம்பிக்கையினை பெற்றிருக்கிறது இந்தியா.
தங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் தொடுக்காமல் பயங்கரவாதிகள் மீது மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தி இருப்பதால் நேரடியாக இந்தியா மீது பழி போட முடியாமல் தவிக்கிறது பாகிஸ்தான். ஆனாலும் இந்தியாவுக்கு பதிலடி தந்துவிடவே தகிக்கிறது பாகிஸ்தான். இந்தியாவும் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சூழல் உருவாகி எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

உலக அளவில் ராணுவ பலத்தில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்றாலும் யுத்தம் நடந்தால் இரு நாடுகளுக்கும்தான் பாதிப்பு என்பதால் யுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றே உலகம் முழுவதும் குரல்கள் எழுகின்றன.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி சூமூக தீர்வு காணவேண்டும் என்றே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குத்ரேஸும் இதே கருத்தையே வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு என்றைக்கும் யுத்தத்தை ஆதரித்ததில்லை. இப்போதும் கூட வைகோ உள்ளிட்ட தலைவர்கள் யுத்தத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
பதற்றத்தால் தகிக்கும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் சமாதானம் வீசும் வெள்ளைப் பூக்கள் மலர்கவே!